Show all

சென்னையில் உள்ள 33 ஆயிரம் தெருக்களில் சுமார் 1 லட்சம் டன் குப்பைகள்

சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் தற்போது குப்பைகள் தேக்கம் மிகப்பெரும் சவாலாக உள்ளது.

சென்னையில் உள்ள 33 ஆயிரம் தெருக்களில் சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்த போது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 21 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

தற்போது சுமார் 30 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் இரவு பகலாக குப்பைகளை அகற்றி வருகிறார்கள். குப்பைகளைக் கொண்டு செல்ல 419 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களில் 20 ஆயிரத்து 847 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் குவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தெருக்களில் சேறும் குப்பைகளின் அளவு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. பொதுவாக சென்னையில் தினமும் சராசரியாக 1000 டன் குப்பை சேருவது உண்டு. ஆனால் தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் மட்டும் இதை விட இரட்டிப்பாக தினமும் குப்பைகள் சேருகிறது.

குறிப்பாக தற்போது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மழை தண்ணீரில் சேதமான, பயன் படுத்த முடியாத பொருட்களை எல்லாம் கழித்து வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் இருந்த 20 சதவீத பொருட்களைக் கழித்து விட்டனர். இந்தக் குப்பைகள் எல்லாம் தெருக்களில் குவிந்து கிடக்கின்றன.

அந்த வகையில் இன்னமும் 80 ஆயிரம் டன் குப்பைகள் சென்னை தெருக்களில் தேங்கிக் கிடக்கிறது. இவற்றை அகற்றுவது துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது.

ஏற்கனவே துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் பலர் நோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் துப்புரவு தொழிலாளர்களுக்கு நோய் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஒரு நாளைக்கு சுமார் 7 ஆயிரம் டன் முதல் 8 ஆயிரம் டன் வரையே குப்பைகளையே அகற்ற முடிகிறது. மீதமுள்ள 80 ஆயிரம் டன் குப்பைகளை அகற்ற வேண்டுமானால் இன்னும் 10 நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

அதுவரை தெருக்களில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் சகதி கலந்த கழிவுகளை அகற்றாவிட்டால் நோய் பரவல் அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே வெளி மாவட்டங்களில் இருந்து குப்பைகளை அகற்ற மேலும் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.