Show all

அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடிசெய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர்  அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

     கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அந்த சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், முதல் நாள் சுமார் 100 விவசாயிகள் வரை பங்கேற்றனர். தற்போது, பிற மாநில விவசாயிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல், நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

     மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக்கயிறு உள்ளிட்டவற்றை வைத்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள்,  தங்கள் வாயில் எலிக்கறி, பாம்புக் கறியை வைத்துக்கொண்டும் போராட்டம் நடத்தினர். 22-வது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த பலனாக, விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடிசெய்துள்ளது.

     தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ‘சிறு குறு விவசாயிகள் மட்டுமன்றி அனைத்து விவசாயிகளும் வாங்கிய கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

     இதுகுறித்து, டெல்லியில் போராட்டம் நடத்திவரும் அய்யாக்கண்ணு  கூறுகையில், விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, ‘எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி’ என்று தெரிவித்துள்ளார்.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.