Show all

பணியில் ஈடுபாடானவர் என்கிற காரணம்பற்றி! மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமனம்

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: முதலாம் ஆண்டு மாணவர்கள், தெரியாமல் சமஸ்கிருத உறுதி மொழி எடுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையிலும், ரத்தினவேல் தவறுக்கு வருத்தம் தெரிவித்த நிலையிலும், மீண்டும் ரத்தினவேலுவை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர் சங்கம் கோரிக்கை வைத்து இருந்த நிலையிலும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில், இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு மாற்றாக- ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பரிந்துரையின் பேரில் ஒன்றிய பாஜக அரசு, இந்தியா முழுவதும் முன்னெடுக்க நினைத்திருந்த மகரிஷி சரக் சப்த் எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்தப்பாடு பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இந்த அடாவடி நிகழ்வு தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நேற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து பேசிய அவர், ரத்தினவேலுவை மீண்டும் முதல்வராக நியமனம் செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், 'மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் ரத்தினவேல் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். அவர் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதால் முதல்வர் உத்தரவுப்படி மீண்டும் அதே பணியில் ஈடுபட உள்ளார்' என்று தெரிவித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,238.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.