Show all

ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002 செப்டம்பர் 20-ம் தேதி வீட்டில் இருந்தபோது ஒரு கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டார். அரிவாளால் வெட்டியதில் அவர், மனைவி, வேலைக்காரர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது குற்றம்சாட்டி, சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் அதிகாரிகளுக்கு கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை ராதாகிருஷ்ணன் அனுப்புவதாக நினைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை விசாரணையில் கூறப்பட்டது.

 

எனவே, இந்தத் தாக்குதல் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்ரமணியம், அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், சுந்தர் என்ற மீனாட்சி சுந்தரம், ஆனந்த் என்ற ஆனந்தகுமார், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், சின்னகுமார் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்துவந்தது. இதில் ரவிசுப்ரமணியம் அப்ரூவராக மாறினார். அப்பு, கதிரவன் ஆகியோர் இறந்துவிட்டனர். எஞ்சிய 9 பேர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

 

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.