Show all

18 பேரும் மீண்டும் தாராளமாக போட்டியிடலாம், இரண்டு மாதங்களில் இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையர்

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர் அறங்கூற்று மன்ற அளவில், தினகரன் ஆதரவு 18 சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்கம், உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் இரண்டு மாதங்களில்  இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தகவல் தெரிவித்தார். 

18 சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அதை பார்த்தோம். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. அதுவரை நாங்கள் காத்து இருப்போம். 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்குவோம். 

18 தொகுதிகளும் ஓர் ஆண்டுக்கும் மேலாக காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும் இரண்டு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். 18 சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், இந்த 2 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்கள் தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. போட்டியிடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்றார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,954.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.