Show all

பிரபாகரன்! பாலமேடு சல்லிக்கட்டு போட்டியின் சிறந்த மாடுபிடி வீரர். அவருக்கு பைக் பரிசாக வழங்கப் பட்டது

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சல்லிகட்டு போட்டி பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் சல்லிக்கட்டு போட்டிகள் முறையே செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று சல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது.  சல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், 2வது நாளாக பாலமேட்டில் சல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது.  இதனை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  போட்டியில் 988 காளைகளும், 846 வீரர்களும் பங்கேற்றனர்.  1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதன்படி, போட்டியில் 10 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.  9 காளைகளை பிடித்த அஜய்க்கு 2வது பரிசும், 8 காளைகளை பிடித்த கார்த்திக்கிற்கு 3வது பரிசும் வழங்கப்பட்டன.

பாலமேடு சல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான முதல் பரிசாக மேலூர் மலம்பட்டியை சேர்ந்த உரிமையாளர் பிரபுவுக்கு கார் வழங்கப்பட்டது.  2வது பரிசு பூவந்தியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது.  3வது பரிசு மதுரை கே.கே. நகரை சேர்ந்த ப்ரியா ராஜசேகரன் என்பவரது காளைக்கு வழங்கப்பட்டது.

பாலமேடு சல்லிக்கட்டு போட்டியில் 48 பேர் காயமடைந்தனர்.  இவர்களில் படுகாயமடைந்த 13 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,034.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.