Show all

தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு சந்த்கபீர் விருது பெற்ற ஒரே நெசவாளர் சுந்தரராஜன் தான்

கைத்தறி நெசவுத் தொழிலை பாரம்பரிய சிறப்புடன் பாதுகாத்ததற்காகவும், அதில் புதுமைகளை புகுத்தியதற்காகவும் பிரதமர் மோடியிடம் இருந்து நாடெங்கும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 72 நெசவாளர்கள் விருது பெற்றனர்.

இவர்களில் சுந்தரராஜன், ஜெயந்தி, பழனிவேலு ஆகிய மூவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.

சுந்தரராஜன் காஞ்சிபுரத்தில் 4–வது தலைமுறையாக கைத்தறி நெசவுத்தொழிலை செய்து வருகிறார். தமது மூதாதையர்களை பின்பற்றி கைத்தறி நெசவை இவர் வாடவிடாமல், வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்.

தமது கைத்தறி நெசவுத் தொழில் மூலம் இவர் காஞ்சிபுரத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வு அளித்துள்ளார். பட்டுச்சேலை நூலிழை வடிவமைப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவர் 2013–ம் ஆண்டுக்கான சந்த் கபீர் விருதை பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு சந்த்கபீர் விருது பெற்ற ஒரே நெசவாளர் சுந்தரராஜன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து ரூ.6 லட்சம் பரிசு, தங்க நாணயம் மற்றும் தாமிரப் பட்டயத்தை வழங்கினார்.

கடந்த 1983–ம் ஆண்டு பட்டுச்சேலை, ரவிக்கை வடிவமைப்புக்காக சுந்தரராஜன் தேசிய விருது பெற்றார். அவர் கூறுகையில், மோசமான நிலையில் உள்ள கைத்தறி நெசவுத் தொழிலுக்கு பிரதமர் மோடி மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அவரது திட்டத்தால் எதிர்காலத்தில் கைத்தறி தொழில் உலக அளவில் சிறப்பு பெறும்’’ என்றார்.

தேசிய விருது பெற்றவர்களில் ஒருவரான பழனி வேலுக்கு பிரதமர் மோடி ரூ.1 லட்சம் பரிசும் தாமிர பட்டயமும் அளித்தார். இவர் பாரம்பரிய பட்டுச் சேலை வடிவமைப்பில் நேற்று இன்று நாளை என மூன்று காலத்தையும் ஒருங்கிணைக்க செய்ததற்காக விருது பெற்றுள்ளார்.

இவரது தந்தை வீரப்பனும் கைத்தறி நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கியதற்காக தேசிய விருது பெற்றவர் ஆவார். வீரப்பன் வடிவமைத்து பரிசாக கொடுத்திருந்த கைத்தறி சேலையை தான் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்படும்போது உடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மற்றொருவர் ஜெயந்தி. இவரும் பிரதமரிடம் இருந்து ரூ.1 லட்சம் பரிசு, தாமிர பட்டயம் பரிசாக பெற்றார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிற்ப வடிவமைப்புகளைப் பார்த்து அவர் புதிய டிசைன்கள் உருவாக்கி இருந்தார். இதற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.