Show all

உத்தரப்பிரதேசத்தில் இந்திய அரசியலமைப்புச்சட்டம் கேலிக்கூத்தாக்கப்படுவதாக! முன்னாள் அறங்கூற்றுவர்கள் குற்றச்சாட்டு

போராட்டம் நடத்த மக்களுக்கு அனுமதி அளிக்காமல், அத்தகைய ஆட்கள் மீது வன்முறை நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச மாநில நிர்வாகம் அனுமதித்து வருவது இந்திய அரசியல் அமைப்புசட்டத்தை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை என முன்னாள் அறங்கூற்றுவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உத்தரப்பிரதேசத்தில், அடிப்படை உரிமைகள் மீதான மிருகத்தனமான அடக்குமுறை குறித்து உச்சஅறங்கூற்றுமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துமாறு முன்னாள் அறங்கூற்றுவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

பனிரெண்டு முன்னாள் அறங்கூற்றுவர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில், உத்தரபிரதேசத்தில் மோசமடைந்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை மீட்க உச்சஅறங்கூற்றுமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- உத்தரபிரதேசத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை உடனடியாக ஒழுங்குபடுத்த, தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு உச்சஅறங்டகூற்றுமன்றத்தை வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக மாநில காவல்துறை மற்றும் மாநில அதிகாரிகளின் உயர்நிலை ஆதிக்கவாதப் போக்கு மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை ஆகியவற்றை உள்ளடக்கி குறிப்பிட்டுள்ளோம். 

போராட்டம் நடத்த மக்களுக்கு அனுமதி அளிக்காமல், அத்தகைய ஆட்கள் மீது வன்முறை நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச மாநில நிர்வாகம் அனுமதித்துள்ளதாக தெரிகிறது. 

உத்தரப்பிரதேச முதல்அமைச்சர் யோகி ஆதித்யநாத் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். போராட்டக்காரர்களை மிருகத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் சித்திரவதை செய்ய, காவல்துறைக்கு இவை கூடுதல் துணிச்சலை அளித்துள்ளன. 

உத்தரப்பிரதேச முதல்அமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இந்த அதிகாரப்பாட்டு அறிவிப்பு என்பது, எதிர்காலத்தில் யாரும் குற்றம் செய்யாமலும் சட்டத்தை கையில் எடுக்காமலும் இருப்பதற்கு இது ஒரு முன்மாதிரியாக அமைகிறது. 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது முதல்தகவல்; அறிக்கை பதிவு செய்து, 300க்கும் மேற்பட்டோரை உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், எவ்வித முன்னறிவிப்பின்றி, போராட்டக்காரர்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன. காவல்துறை காவலில் இருக்கும் இளைஞர்களை லத்தியால் தாக்கும் காணொளிகளும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் விரட்டி அடிக்கும்; காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி, நாட்டின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. 

ஆளும் நிர்வாகத்தின் இத்தகைய கொடூரமான அடக்குமுறையானது, குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பையும், அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை கேலிக் கூத்தாக ஆக்குவதாகவும் உள்ளது. சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆளும் நிர்வாகத்தின் கீழ்த்தரமான அணுகுமுறை இதுவாகும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் உச்சஅறங்கூற்றுமன்றத்தின் முன்னாள் அறங்கூற்றுவர்கள், பி.சுதர்சன் ரெட்டி, வி.கோபால கவுடா, ஏ.கே.கங்குலி ஆகியோர் கையெழுத்திட்டனர். மேலும், டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தின் தலைமை அறங்கூற்றுவர் மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் அறங்கூற்றுவர் ஏபி ஷா, சென்னை உயர்அறங்கூற்றமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் கே சந்துரு, உயர்அறங்கூற்றமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் முகமது அன்வர் ஆகியோரும் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், சிறீராம் பஞ்சு, ஆனந்த் குரோவர், பிரசாந்த் பூஷன் ஆகியோர் உட்பட 12 பேர் கையெழுத்திட்டனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,281.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.