Show all

என்ன நடந்து கொண்டிருக்கிறது! ப.சிதம்பரம் அவர்களைச் சுற்றி

டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வீடு சென்ற நிலையில், ப.சிதம்பரம் வீட்டுக்குள் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நுழைய முற்பட, அவர்கள் அனுமதிக்கப்படாததால் ஒரு பகுதியினர் சுவர் ஏறிக்குதித்து பின்பக்கம் வழியாக நுழைந்தனர். இந்த நிலையில், வீட்டின் முன்பகுதி மற்றும் பின்பகுதி முழுவதையும் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனராம்.

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ப.சிதம்பரம் இன்று டெல்லி காங்கிரஸ் தலைமையகத்திற்கு வருகை புரிந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். வழக்கறிஞர்கள் கபில் சிபில், சல்மான் குர்ஷித் உடன் இருந்தனர். 

செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: நாம் விடுதலையைப் பெறவும் போராடுகிறோம், காக்கவும் போராடுகிறோம். மக்களாட்சி தத்துவத்தின் மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நிறைய நடந்து விட்டது. பலருக்கும் கடந்த ஒருநாள் நிகழ்வுகள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். 
ஐஎன்எக்ஸ் வழக்கில் என்னை நேரடியாக குற்றஞ்சாட்டவில்லை. ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றப்பத்திரிக்கை இன்னும் பதிகை செய்யப்படவில்லை. அதேபோல் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் என்னுடைய பெயர் இல்லை. நான் தவறு செய்ததாக எங்கும் குற்றச்சாட்டு இல்லை. இந்த வழக்கில் நிறைய பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். பொய் சொல்வதில் வல்லமை படைத்தவர்கள் இதில் பொய்யை பரப்புகிறார்கள். ஆனால் உண்மையை யாரும் மறைக்க முடியாது. எனக்கு நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. நான் அதற்கு எதிராக மனு பதிகை செய்தேன். எனக்கு கடந்த ஆண்டே விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில்தான் நேற்று எனக்கு டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் முன் பிணை வழங்கவில்லை. இதனால் நான் உச்சஅறங்கூற்றுமன்றம் சென்றேன். ஆனால் இந்த வழக்கை உச்சஅறங்கூற்றுமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார்கள். இதனால் அவசர அவசரமாக நாங்கள் இரவு முழுக்க முன் பிணை மனுக்களை தயார் செய்தோம். 

உச்சஅறங்கூற்றுமன்றம் இந்த வழக்கை இன்று விசாரிக்க முடியாது. வெள்ளிக்கிழமைதான் விசாரிப்போம் என்று; கூறிவிட்டது. நான் சட்டத்தில் இருந்து மறைந்து ஒளியவில்லை. என் மீது தவறாக புகார் கூறினார்கள். என் மீதும், என் குடும்பம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. விசாரணை ஆணையம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். நான் சட்டத்தை மதிக்கிறேன், எங்கும் செல்லவில்லை. நான் தலை நிமிர்ந்து நடப்பேன். வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணை வரை ஆணையம் பொறுமை காக்க வேண்டும். என்று ப.சிதம்பரம் பேட்டியில் தெரிவித்தார்.

டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசிய நிலையில், அங்கு நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். ஆனால், அதற்கு முன்பாகவே சிதம்பரம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்கி ஆகியோரும் அவருடன் இருந்ததாக அறிய முடிகிறது.

டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்குள் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நுழைய முற்பட்டனர். அவர்கள் அனுமதிக்கப்படாததால் ஒரு பகுதியினர் சுவர் ஏறிக்குதித்து பின்பக்கம் வழியாக நுழைந்தனர். இந்தநிலையில், வீட்டின் முன்பகுதி மற்றும் பின்பகுதி முழுவதையும் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனராம். இதனிடையே ப.சிதம்பரம் வீட்டுக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ப.சிதம்பரம் தனது வீட்டுக்குள் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் கைது செய்யபட வாய்பிருப்பதாக கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,251.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.