Show all

சீமான் கண்டனம்! அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது ஒன்றிய அரசின் அடக்குமுறை, தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போல பல வேலைகளை பாஜக ஒன்றிய அரசு செய்யும் என நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நடைமுறையாக்கத் துறையினர், மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். 

தொடர்ந்து இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நடைமுறையாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்த சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

'அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை ஒன்றிய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறையாகும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த நேரத்தில் அவர் குணமாகி வர வேண்டும் என வாழ்த்துக்கிறேன். யார் வந்தாலும் அவர்களது வசதிக்கு ஏற்றபடி அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்று பல வேலைகளை ஒன்றிய அரசு செய்யும்.

குற்றப் புலனாய்வுத்துறை, நடைமுறையாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகின்றன. இந்த அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி இல்லை இது கொடுங்கோலாட்சி முறை. அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட ஊழலுக்கு கைது என குற்றம் சாட்டுவது, காலம் தாழ்ந்த நடவடிக்கை. ஒன்றிய அரசு மிரட்டி அச்சுறுத்தும் பாணியில் பணிய வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று' என்று கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,644.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.