Show all

எந்த அளவிற்கு செயல்படுத்துவார்கள் பார்ப்போமே! வீட்டிற்கே அனுப்பி வைப்பார்களாம் பணம் வழங்கும் இயந்திரத்தை

இனி பணம் வழங்கும் இயந்திரம் தேடி அலைய வேண்டாம். புலனத்தில் ஒரு சேதி போதும். உங்க வீட்டுக்கே பணம் வழங்கும் இயந்திரம் வந்துவிடும் என்கிற சேதியை இந்திய மாநில வங்கி தெரிவித்திருக்கிறது. 

08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நமக்கு உடனடித் தேவை ரூபாய் நூறு என்று பணம் வழங்கும் இயந்திரத்திற்குச் சென்றோமானால், அதில் ஐநூறுதான் கிடைக்கும் என்று வரும். பல நேரங்களில் நமது ஐநூறு தேவைக்கு பணம் வழங்கும் இயந்திரங்களை நாடினால் 2000 ரூபாய் தாள்தான் இருப்பதாக சேதி வரும். மூன்று நான்கு தெருக்களுக்கு ஓடி, ஐந்தாறு பணம் வழங்கும் இயந்திரங்களில் நமது ஆதாய அட்டையை சொறுகி சொறுகி இழுத்து சிலநேரங்களில் பணத்தோடும் சில நேரங்களில் ஏமாற்றத்தோடும் திருப்பிக் கொண்டிருக்கிறோம்.

இனி பணம் வழங்கும் இயந்திரம் தேடி அலைய வேண்டாம். புலனத்தில் ஒரு சேதி போதும். உங்க வீட்டுக்கே பணம் வழங்கும் இயந்திரம் வந்துவிடும் என்கிற சேதியை இந்திய மாநில வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த கொரோனா சோக கால கட்டத்தில் நல்ல சேதியாகத் தோன்றினாலும் அப்படியொன்றும் இனிக்க வில்லை. இந்தியாவில் எந்த உரிமைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்பதாகத்தான் கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. 

பணமதிப்பிழப்பால் நமது அஞ்சறைப் பெட்டிகளில் இருந்த பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு நடுத்தெருவில் நாயாக அலைய வேண்டியிருந்தது. நமது விற்பனைக்கான மாநில வரிகள் இவ்வளவுதான் என்ற உறுதியில் வாடிக்கையாளர்களைக் கவர வரிகளை நாமே ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்த நிலையில் வந்தது சரக்கு சேவை வரி. நமது வாடிக்கையாளர்களிடம் நமது நாணயத்தை இழந்தோம். 

ஹலோ என்ற செயலியில் இந்தியாவில் பலர் தொழில், வணிக வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். அது சீனச்செயலி என்று தடை செய்து ஒரே நாளில் பலரின் வாழ்மானத்தைக் கேள்விக்குள்ளாக்கினார்கள். ஆனால் உலக மாஉயர பட்டேல் சிலையை இவர்கள் மட்டும் சீனாவிடம் இருந்து வாங்கலாமாம்.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துகிறோம் என்று கூறி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை இரத்து செய்தார்கள். ஆனால் எந்த அமைதியும் திரும்பவில்லை மாறாக அவர்களுக்கு எளிதான மற்ற மாநிலத் தொடர்பில் கொரோனா கிடைத்ததுதாம் மிச்சம்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய மாநில வங்கி, புலனம் வழியாக பணம்வழங்கும் இயந்திரச் சேவையை வீட்டிற்கே கொண்டுவந்து தரப்போவதாக அறிவித்திருக்கிறது. 

நாட்டில் பல இடங்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடைக்க வேண்டிய நிலையே நீடித்து வருகின்றது. இன்னும் சிலர் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருந்து வருகின்றனர். எனினும் தங்களது கட்டாயத் தேவைக்கு என பணம் எடுக்க பணம்வழங்கும் இயந்திரங்கள் அல்லது வங்கியையோ நாடி செல்கின்றனர். பணம் வழங்கும் இயந்திரங்களுக்குச் செல்லும்போது கூட்டம் கூடுவதால் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. 

இந்த நிலையில்தான் இனி மக்கள் பணம் எடுக்க பணம்வழங்கும் இயந்திரங்களைத் தேடி செல்லத் தேவையில்லை. மாறாக பணம் வழங்கும் இயந்திரங்களே உங்கள் வீடு தேடி வரும். உங்களுக்கு பணம் எடுக்க வேண்டுமென்றால் இந்திய மாநில வங்கிக்கு புலனம் வழியாக ஒரு சேதி அனுப்பினால் போதும். அல்லது பேசியில் அழைப்பு விடுத்தாலும் சரியே, நீங்கள் இருக்கும் இடத்திற்கே பணம்வழங்கும் இயந்திரம் வந்துவிடும். அதன் மூலம் நீங்கள் மிக எளிதாவும், பாதுகாப்பாகவும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். இதற்கான அறிவிப்பை இந்திய மாநில வங்கியின் தலைமை பொது மேலாளர் அஜய் குமார் அதிகாரப்பாடாக தனது கீச்சுப் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தற்போது முதற்கட்டமாக லக்னோவில் மட்டும் இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் வீட்டிற்கே பணம்வழங்கும் இயந்திரச் சேவைகள் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. அதற்குள் எந்தவகையிலாவது இதற்குத்  தடைவராமல் இருந்தால் நாமும் பயன்பெற முடியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.