Show all

ஆயுஷ் அமைச்சக செயலரின் அதிரடிக்கு சீமான் கொடுத்த பதிலடி!

நடுவண் அரசு அதிகாரிகளை வைத்து ஹிந்தி தெரியாதவர்களுக்கு கொடுத்து வரும் அதிரடியை உடனே நிறுத்தும் வண்ணம்- மிகப்பணிவாக, ஏக்கத்தோடும்… எதிர்பார்ப்போடும்… என்று சீமான் போட்ட கிடுக்கிப்பிடி இணையத்தை தீயாக்கி வருகிறது. 

08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் உள்ள இயற்கை மருத்துவர்களுக்கு கடந்த ஆவணி இரண்டு முதல் நான்கு வரை இயங்கலை வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் நடுவண் ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கோட்சே ஹிந்தியில் பேசினார். 

ஒன்றும் புரியாத தமிழ்நாடு மற்றும் ஹிந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆங்கிலத்தில் பேசும்படி கூறினர். இதனை ஏற்க மறுத்த இராஜேஷ், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும், ஹிந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் எனவும் தெரிவித்தார். இராஜேஷ் கோட்சே கூறியது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுஷ் துறை செயலாளர் கோட்சே  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை நடுவண் அரசு வேடிக்கை பார்ப்பதாக சாடியுள்ள ஸ்டாலின், அதிகாரிகளை வைத்து ஹிந்தியைத் திணிப்பதுதான் திட்டம் என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதேபோல், வைகோ, கனிமொழி, இராமதாஸ், விஜயகாந்த், ஜி.கே வாசன். என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சீமான் தனது கீச்சு பக்கத்தில் நடுவண் அரசின் ஆதிக்கவாத அரசியலுக்கு சூடு கொடுக்கும் விதமாக கடும் கண்டனத்தை பதிலடியாக பதிவு செய்துள்ளார். 

ஹிந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என்று சொல்வது போல ஹிந்தி தெரியாத மாநிலங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா? ஏக்கத்தோடும்... எதிர்பார்ப்போடும்... என்று பதிவிட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.