Show all

உழவர்களின் டிராக்டர் பேரணிக்கு! காவல்துறை அனுமதி. டீசல் வழங்க உத்தரப் பிரதேச அரசு தடை

நாளை குடியரசு நாளன்று  நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி கிட்டியுள்ள நிலையில், டிராக்டர்களுக்கு டீசல் வழங்க உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை குடியரசு நாளன்று  நடைபெறும் டிராக்டர் பேரணியை தடுக்கும் வகையில் டிராக்டர்களுக்கு டீசல் வழங்க உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

வட இந்திய மக்கள், நாடாளுமன்றத்தில், பாஜகவுக்கு பெரும்பான்மை வழங்கிவிட்ட பிழை- சிலப்பதிகாரம் சொல்லும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதாக இன்று அது அவர்களுக்கு பெருந்துயராக- பாஜக விலக்கிக் கொள்ள மறுக்கும் மூன்று சட்டங்களாக- நிமிர்ந்து நிற்கிறது.

நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை இருப்பதால், இராகுல் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லும் மூன்று நான்கு கார்ப்பரேட்டுகளுக்கு உழவர்பெருமக்களை அடிமையாக்கும் வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் மூன்று கார்ப்பரேட் சட்டங்கள் எளிதில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. 

இந்த சட்டங்களை விலக்கிக் கொண்டேயாக வேண்டும் இது எங்களுக்கு வாழ்வா சாவா போராட்டமாகும். என்று, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள உழவர்கள் இச்சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளது  11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: (26.11.2020) தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது. வரும் குடியரசு நாளுக்குள் (நாளை) வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு போட்டுள்ள கார்ப்பரேட் சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் மிகப் பெரியளவில் போராட்டம் நடைபெறும் என்று உழவர்கள் இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தனர். 

இருப்பினும், ஒன்றிய பாஜக அரசுக்கு இந்தச் சட்டங்களை திரும்பெறும் எண்ணம் இல்லை என்பதை பல்வேறு வகைகளிலும் ஒன்றிய அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர். இதையடுத்து குடியரசு நாளன்று மிகப் பெரிய டிராக்டர் பேரணியை நடத்த வடஇந்திய உழவர் பெருமக்கள் தாயாராகி வருகின்றனர். 

உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான உழவர்கள் இந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டிராக்டர் பேரணியில் உழவர்கள் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில், டிராக்டர்களுக்கு டீசல் வழங்க வேண்டாம் என்று உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

உத்தரப் பிரதேச அரசின் இந்த உத்தரவுக்கு வேளாண் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், டீசல் வழங்க மறுத்தால் உழவர்கள் தாங்கள் இருக்கும் நகரங்களிலேயே சாலை மறியலில் ஈடுபடுங்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மாநிலம் முழுவதுமே உத்தரப்பிரதேச அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

டிராக்டர் பேரணி தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் காவல் துறை அதிகாரிகளுடன் உழவர்கள் கலந்துரையாடல் நடத்தினர். அதைத்தொடர்ந்து பேரணிக்குக் காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். குடியரசு நாளன்று டிராக்டர் அணிவகுப்பு நடத்த டெல்லி காவல்துறையிடம் அனுமதி பெற்றதாக வேளாண் சங்கங்கள் கூறியுள்ளன. 60 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 தடங்களில் பேரணி நடைபெறும் என்று கூறினார்கள்.

ஆனால் டெல்லியின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், இதுபற்றி கூறுகையில், வாகனங்களின் பதிவு எண் மற்றும் உரிமையாளர்களின் அடையாளம் போன்ற விவரங்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட பின்னரே பேரணியை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். என்றார்.

முன்னதாக குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு காவல்துறை அதிகாரிகளை கீர்த்தி கிசான் யூனியனின் துணைத் தலைவர் ராஜீந்தர் சிங் தீப் சிங்வாலா, உள்பட முதன்மை நிர்வாகிகள் சந்தித்தனர். காவல்துறையினரைச் சந்தித்த பின் ராஜீந்தர் சிங் தீப் சிங்வாலா பேசுகையில், உழவர்கள் 60 கி.மீ நீளத்திற்கு அணிவகுப்பை நடத்துவார்கள், அதில் பாதி தூரம் ஒன்றியத் தலைநகரான டெல்லிக்குள் இருக்கும்.

இதனிடையே திட்டமிட்டபடி குடியரசு நாளன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ள உழவர்கள், குடியரசு நாள் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்காது என்று உறுதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் குடியரசு நாள் நிகழ்வுகளில் ஹரியானா அமைச்சர்கள், அரசியல் தலைவர்களை எதிர்க்க வேண்டாம் என்று உழவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் ஹரியானா பி.கே.யூ தலைவர் ஜி.எஸ்.சருனி சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரம் குடியரசு நாளைத் தவிர மற்ற நாட்களில் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் மூலம் உழவர்கள் அமைச்சர்களை தொடர்ந்து எதிர்ப்பார்கள் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.