Show all

மோடியைத் துக்ளக்குடன் ஒப்பிட்டு தெளிவான புள்ளி விவரங்களுடன் யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பா.ஜனதா மூத்த தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்கா தலைமை அமைச்சர் மோடியின் பண மதிப்பு நீக்கம், சரக்குசேவை வரி விதிப்பு ஆகிய நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்பு நாட்டை ஆண்ட மன்னர்கள் தங்களது ஆட்சிக்காலங்களில் புதிய நாணயங்களை புழக்கத்தில் விட்டனர். ஏற்கனவே முந்தைய அரசர்கள் புழக்கத்தில் விட்ட நாணயங்கள் இருந்தாலும் தங்களுக்கென புதிய நாணயங்களை வெளியிட்டனர்.

ஆனால் 700 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஆட்சி செய்த சுல்தான் முகமது பின்துக்ளக் தனக்கென புதிய நாணயத்தை வெளியிட்ட போது புழக்கத்தில் இருந்த பழைய நாணயத்தை செல்லாது என அறிவித்தார். டெல்லியில் இருந்து தலைநகரை தவுலதாபாத்துக்கு மாற்றினார். இதனால் துக்ளக்கின் புகழ் பாதிக்கப்பட்டது. அவரும் நாணயத்தை மதிப்பிழக்கச் செய்தவர்தான்.

நாட்டில் இப்போது நிலவும் பெரிய பிரச்சினையே வேலை இல்லாத் திண்டாட்டம்தான். நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் நமக்கு அந்த ரூபாயை அச்சிட செலவிடப்பட்ட ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி இழப்பாகும். ரூபாய் மதிப்பிழப்பால் பொருளாதார வளர்ச்சி 1.5 விழுக்காடு குறைந்தது என்று மட்டும் கருத முடியாது. அதைவிட அதிகம் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடியை விட அதிகம் இழப்பு ஏற்பட்டதாகவே கருதுகிறேன்.

அதாவது 2 லட்சத்து 25 ஆயிரம் கோடியுடன் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை அச்சிட செலவான ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடியையும் கணக்கிட்டால் நமது நாட்டுக்கு நேரடியாக ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கோடியாகும்.

மத்தியில் முன்பு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா அரசு இருந்தது. அவர் இது போல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி என்றால் அவருக்கு ஏன் பாரத ரத்னா விருது கொடுத்தோம்?

இவ்வாறு யஷ்வந்த் சின்கா கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,608

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.