Show all

நமக்குத் தேவை! நீட்டை தடை செய்யவல்ல அரசு. நெகிழிப் பொருட்களை தடை செய்யும் அரசு அல்ல;

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் நெகிழிப் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது ஆறு மாதங்களில் முழு அளவில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நெகிழி உள்ளதாம்.

தமிழக கல்வி உரிமைக்கும், மாணவர்கள் உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், தமிழகத்துக் கல்வி உரிமையில் கை வைத்திருக்கிற நடுவண் அரசின் நீட்டுக்கு எப்போது தடை? 

நெகிழிப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க இருக்கிற அதிகாரம், நீட்டிற்கு தடை விதிக்க முடியாமல் எங்கே போயிற்று?

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 1,14,302. ஆனால் தேர்ச்சி பெற்றோர் வெறும் 45336. அதாவது 40 விழுக்காடு மட்டுமே. எஞ்சிய 60விழுக்காடு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த காலங்களைப் போல பனிரெண்டாம் தேர்வில் 1100க்கும் மேல் நல்ல மதிப்பெண் எடுத்து இயல்பாக மருத்துவ படிப்பு கிடைக்க வேண்டிய விழுப்புரம் பிரதீபா போன்றவர்கள் தோல்வியைத் தழுவி இன்று மரணித்துப் போய்விட்டனர். தமிழ்நாட்டு மாநில கல்வி முறையில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கும் இந்த நீட்டை தடை செய்யமல், தமிழக அரசு தரும் கல்வியால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்?

அனிதா தன் உயிரையே மாய்த்த போதும் கேளா அரசாக நடுவண் அரசும், நீட்டை அப்புறப் படுத்த முயலா அரசாக தமிழக அரசும் இருந்து வருகின்றன. இப்போது விழுப்புரம் பிரதீபா மாண்டு போய் விட்டார். விழுப்புரத்து கீர்த்திகா மாண்டு போக முயற்சித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அநீதி? 

கல்வியில் சிறந்த தமிழகத்தை கட்டங் கடைசிக்கு தள்ளி டெல்லி கொடூரமாக சிரிக்கிறது.. இது நம்மை திட்டமிட்டு அவமானப்படுத்துகிற கல்வித் தரப்படுத்துதல் என்பதை தமிழக அரசும் நம்மிடம் சம்பளம் பெறுகிற, கீழமை அறங்கூற்று மன்றம், உயர் அறங்கூற்று மன்றம் என்று இத்தனை அறங்கூற்றுவர்களுக்கும் புரியாமல் போனது எப்படி? 

60 விழுக்காடு மாணவர்களை தகுதியிழந்தவர்களாக காட்டுகிற நீட்டை தகுதியிழப்பு செய்தாக வேண்டும். இல்லாவிட்டால், இந்த அரசுகளை மக்கள் அடுத்த தேர்தலில் உறுதியாக தகுதியிழக்கச் செய்வார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,809. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.