Show all

மோதுங்கடா பார்க்கலாம்! இதுதாண்டா நடுவண் அரசு கல்வி வாரியக் கல்வித்திட்டம்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு கல்வி வாரிய 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய ஏற்றதாழ்வுகளை வளர்க்கும் வகையில் நஞ்சை விதைக்கும் விதமாக கேட்கப்பட்டுள்ள இந்தக் கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. 

நடுவண் அரசு கல்வி வாரிய 6ம் வகுப்பு மாணவர்களுக்கான் சமூக அறிவியல் வினாத்தாளில் ஹிந்துமத வர்ணாசிரமத்தின் படி மிகத்தாழ்ந்த சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கான விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், ஷத்ரியர்கள், வானப்ரஸ்தா என்று கொடுக்கப்பட்டுள்ளன. சமூகவலைதளங்களில் தீயாகப் பரவி மாணவர்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் வகையில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.

ஆர்எஸ்எஸ்இன் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் இது. நாளை இதுதான் அவர்கள் முன்வைக்கப் போகும் அரசியல் சட்டம் என்று வழக்கறிஞர் அருள்மொழி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

6ம் வகுப்புக்கு அந்தந்தப் பள்ளிகளே கேள்வித் தாள்களை வடிவமைத்துக் கொள்கின்றன. எனினும்; தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள பாடநூலின் அடிப்படையிலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது போன்ற கேள்வி வடிவமைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நீதி ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். (திட்டமிட்டு செய்கிறவர்களிடமே அப்படியான பொறுப்பைக் கொடுக்கும் கோமாளித்தனமான வேண்டுகோள் இது) பிஞ்சு வயதிலேயே மாணவர்கள் மனதில் உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற நஞ்சை விதைக்கும் மோடி அரசின் கல்வி வாரியத்திற்கு  கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

எரிகிற கொள்ளியை எடுத்தால் பொங்குகிற பால் அடங்கும் என்பார்கள். கொள்கைத் திட்டமாக, திட்டமிட்டு தப்பு செய்யும் பாஜகவிற்கு கண்;டனங்கள் தூசு மாதிரி; தட்டி எறிந்து விடுவார்கள். வரும் தேர்தலில், மின்னணு கருவி வாக்குப் பதிவை முற்றிலும் தவிர்த்து பாஜகவிற்கு சரியான பாடம் புகட்டுவது மட்டுமே உரிய வழியாக இருக்க முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,724.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.