Show all

உதய் மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம்

உதய் மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்து உள்ளதாக நடுவண் மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். நடுவண் மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தில்லியில் இன்று மாலை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் நடுவண் அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் சேருவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடுவண் அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டம் என்பது, பல்வேறு மாநிலங்களில் உள்ள நலிவுற்ற மின் விநியோக நிறுவனங்களை மேம்படுத்த உதவுவதே ஆகும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், மின் விநியோக நிறுவனம் கடனில் இருந்தால் அதில் 75 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும். மின் விநியோக நிறுவனங்களும் 25 சதவீத கடன் பத்திரங்களை அளித்து, 3 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்வது, நிர்வாகத் திறனை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்துவது என உதய் திட்டத்தின் சாராம்சங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கூட்டம்முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல் உதய் மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.