Show all

திரிபுராவும் போச்சா! பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கம்யூனிஸ்ட் வேதாந்திகளே

19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், காங்கிரசுக்கான போட்டி கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் துடைத்தெறிப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சிந்திக்க வேண்டிய கருத்து. ஆனால் அந்த வரட்டு வேதாந்திகள் சிந்திக்க மாட்டர்கள் என்பதுதாம் உண்மை.

  திரிபுரா தேர்தல் முடிவுகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டியது காலத்தின் அவசியமாக இருப்பதை உணர்த்துவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திரிபுரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற திரு.கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 50, 60 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவில் இருந்த நிலைமை வேறு. தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த காலகட்டம் அது.

இன்றைய சூழ்நிலையில் அனைத்து குடும்பங்களும் கல்விக்கு முதன்மை கொடுத்து கொண்டிருக்கின்ற நிலையில் படித்தவர்கள் அதிகமாகி விழிப்புணர்வு மேம்பட்டு இருக்கிறது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய அடிப்படை கொள்கைகளும், தொழிலாளர்களின் பாதுகாப்பு நிலைப்பாடுகளும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சமுதாயம் விழிப்புணர்வு அடைந்திருக்கின்ற நிலையில், 50 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு அதனுடைய தேவை குறைந்திருக்கிறது. பல தொழிற்சாலைகளுக்கு அடிமட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் அந்தந்த தொழிற்சாலைகளே தங்களுடைய தொழிலாளர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தி தக்க வைத்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தை தொடர்ந்து இன்றைக்கு திரிபுராவிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கோட்டைகளாக திகழ்ந்தவை. உலகத்தில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் அடிப்படை கொள்கைகளில் காலத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுடைய பணி ஒரு நாட்டிற்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. அப்படி இருக்கின்ற சூழ்நிலையில் தேய்ந்து கொண்டிருக்கின்ற கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தங்களை தூக்கி நிறுத்திக்கொள்ள அடிப்படை

கொள்கைகளை பரிசீலித்து காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உள்ள எளிமை பாராட்டப்பட வேண்டியது. ஆனால் அதே சமயத்தில் பொதுமக்கள் ஆதரவு கொள்கைகளை உட்புகுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு நல்லெண்ண அடிப்படையில் இந்த தருணத்தில் இந்த கருத்துக்களை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறோம்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,715.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.