Show all

நாளை உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு! பட்டாசுக்கு எதிராக நாடு முழுவதும் தடை கோரிய வழக்கில்

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, ஆதலால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தல் அகியவைகளுக்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்திருந்தனர். இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் மனு பதிகை செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் மனுதாரர், பட்டாசு தயாரிப்பாளர்கள், நடுவண் அரசு மற்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் வாதங்களைக் கேட்ட உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் நாள் குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு நாளை வழங்கப்பட, வழக்குப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கிவரும் வேளையில் இந்த வழக்கில் வரும் தீர்ப்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த அறங்கூற்றுவர்கள், தொழில் செய்வதற்கான உரிமையும் பாதிக்கப்படக்கூடாது, மக்களின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடாது, இரண்டுக்கும் இடையே சமநிலை உண்டாக்குவது கட்டாயம். பட்டாசு உற்பத்தியாளர்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளும் அவர்களுக்கு பாதிக்கப்படக்கூடாது, 130 கோடி இந்தியர்களின் உடல்நலமும் கெடக் கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறோம் என்றனர்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், தீபாவளி நேரத்தில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகள், வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டும் காற்று மாசு ஏற்படுவதில்லை. காற்று மாசு ஏற்படுவதற்குப் பட்டாசுகள் ஒரு காரணம். அதற்காக ஒட்டுமொத்த தொழிலையும் மூடச் செய்யக் கூடாது. பட்டாசு புகை மட்டுமல்லாது, வாகனங்கள் வெளியிடும் புகை, கட்டுமானத் தூசு, குப்பைகள் எரிப்பது போன்றவற்றாலும் காற்று மாசு ஏற்படுகிறது. காற்று மாசு ஏற்படும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும்போது, பட்டாசு நிறுவனங்களை மட்டும் மூட வேண்டுமா என்று வாதிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, காற்று மாசால் மக்கள் சந்தித்து வரும் சுவாசக் கோளாறுகள், குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றைக் கண்டு அறங்கூற்றுவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க வேண்டுமா, அல்லது சில காரணங்களுக்காக பட்டாசுகள் வெடிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பதைத் தீர்மானிப்போம். தற்போது நாட்டில் 25விழுக்காடு குழந்தைகள் சுவாசக் கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறங்கூற்றுவர்கள் கவலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,948.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.