Show all

கசிய விட்ட அமைச்சர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை! இலங்கை அமைச்சரவையில் உரையாடப்பட்ட கமுக்கத் தகவல்களை ஊடகங்களுக்கு

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அமைச்சரவையில் உரையாடப்பட்ட கமுக்கத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்ட அமைச்சர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை அதிபர் எடுக்க விருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார், அந்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல். பீரிஸ் இலங்கை அதிபரைக் கொல்ல சதித்திட்டத்தின் பின்னணி குறித்த உண்மை நிலவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இலங்கை அதிபரான மைத்திரிபால சிறிசேனாவைக் கொல்ல சதி தொடர்பான வழக்கில் இந்திய குடிமகனான கேரளாவைச் சேர்ந்த தாமஸ் என்பவரைக் கடந்த மாதம் இலங்கையின் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலங்கையின் அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, 'இந்திய உளவு அமைப்பான 'ரா' என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை' எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால் புதன்கிழமை இலங்கை அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன செய்தியாளர்கள் சந்திப்பில், 
'தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால், இந்தியாவின் உளவு அமைப்பான ரா உள்ளது என அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஒருபோதும் குற்றம் சாட்டவில்லை என்றும், 
சதித்திட்ட குற்றச்சாட்டுடன், ரா தொடர்பு படுத்தப்பட்டுள்ளதாகத் தான், அதிபர் மைத்திரிபால சிறிசேனா சுட்டிக்காட்டினார்' 
என்றும் விளக்கமளித்தார். மேலும் இது குறித்து இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் விளக்கமும் அளித்திருந்தார்.

தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் வருகிறது. மேலும் இலங்கை அமைச்சரவையில் உரையாடப்பட்ட அமைச்சரவை ரகசியங்களை ஊடகங்களிடம் வெளியிட்ட அமைச்சர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கொழும்பில் இலங்கையின் முதன்மை எதிர்க்கட்சியான பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் அதன் தலைவர் ஜி.எல். பீரிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் ஜி.எல். பீரிஸ் கூறுகையில், 'கொலை சதித்திட்டத்தின் பின்னணியின் உள்ள உண்மை நிலவரத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பகிரங்கப்படுத்த வேண்டும்.' என்றார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,948.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.