Show all

தமிழ்நாட்டு அச்சகத்தை மூடும் நடுவண் அரசு முயற்சிக்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம்

இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பா.ஜ.க.வின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு எதிரான அணுகுமுறையின் அடிப்படையில் கோவையில் உள்ள நடுவண் அரசு அச்சகத்தை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நடுவண் அச்சகத்துடன் இணைக்க நரேந்திர மோடி அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் அச்சகத்தில் பணியாற்றுகிற ஆயிரம் குடும்பங்கள் வேலை இழந்து பரிதவிக்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராசர் எடுத்துக் கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக அன்றைய நடுவண் அரசால் 1964 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையில் 132 ஏக்கர் பரப்பளவில் 463 பணியாளர்கள் குடியிருப்பு கொண்ட மத்திய அச்சகம் துவக்கப்பட்டது.

இந்த அச்சகத்தை மூடி, இதன் சொத்துக்களை பொதுச் சந்தையில் விற்பனை செய்து நாசிக் நடுவண் அச்சகத்தை நவீனப்படுத்துவதற்கு பயன்படுத்த நடுவண் அரசு முயல்வது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது. தமிழ்நாட்டில் லாபத்தில் இயங்குகிற அச்சகத்தை மூடிவிட்டு, இன்னொரு மாநிலத்தில் நட்டத்தில் இயங்குகிற அச்சகத்தை நவீனப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற முடிவை நடுவண் அரசு எடுத்திருப்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவை எதிர்த்து கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.