Show all

இந்திய வரலாற்றில் தாஜ்மகாலுக்கு இடமில்லை: பாஜக சட்டமன்றஉறுப்பினர் சங்கீத்சோம்

இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ளது புகழ் பெற்ற, தாஜ்மகால். ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் எழிலை ரசிக்க உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்திலுள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, சுற்றுலா துறை புத்தகத்திலிருந்து தாஜ்மகால் நீக்கியது. அரசு வரவுசெலவுத் திட்டத்தில் தாஜ்மகால் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சர்தானா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், மீரட் நகரில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில்,

தாஜ்மகாலை இந்திய வரலாற்றிலிருந்து நீக்க பலரும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். நீங்கள் எந்த வரலாறை பேசுகிறீர்கள்? தாஜ்மகாலை உருவாக்கியவர் தனது சொந்த தந்தையை சிறையில் அடைத்தார். ஹிந்துஸ்தானில் இருந்து இந்துக்களைத் துடைத்தெறிய நினைத்தார். இதுபோன்ற நபர்களை நமது வரலாற்றில் வைத்துள்ளது துரதிருஷ்டவசமானது. வரலாறு மாறும் என்பதை உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

ராமர், வீரசிவாஜியின் வரலாறுதான் இந்தியாவுக்கு தேவை

இவ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில்,

தாஜ்மகாலை உருவாக்கிய ஷாஜகான் தனது தந்தை ஜகாங்கீரை சிறையில் அடைக்கவில்லை என்பதுதான் வரலாறு. உண்மையில், ஷாஜகான் மகனும், முகலாய வரிசையின் 6வது மன்னருமான அவுரங்கசீப்தான், ஷாஜகானை வீட்டு சிறையில் அடைத்தார் என்றும், தாஜ்மகாலைப் பார்த்தே உருகியபடி தனது இறுதி காலத்தை ஷாஜகான் கடந்தார் என்பதுதான் வரலாறு.

சங்கீத் சோம், வரலாற்றையே மாற்றுவோம் என கூறியதோடு, வரலாறை தப்பாகவும் சொல்லியுள்ளது சர்ச்சையை அதிகரித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.