Show all

டெங்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியதாக தினகரன் மீது வழக்குப்பதிவு

இன்று 30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சி திருவரங்கத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நேற்று திருச்சி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தினகரன், திருச்சி அ.தி.மு.க. அம்மா அணி மாவட்டச் செயலாளர்கள் சீனிவாசன், மனோகரன், ராஜசேகரன், அரியலூர் முத்தையன், அமைப்புச்செயலாளர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சி முடித்து, அதே தெருவில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்பு உணர்வு துண்டறிக்கை வழங்கினார்.

பிறகு இதழியலாளர்களைச் சந்தித்த தினகரன், ‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பலியாகி உள்ளனர். ஆனால் அதனை மறைத்துவிட்டு ஆட்சியில் இருப்பவர்கள் மேடை போட்டு ஏதேதோ பேசி வருகிறார்கள். புலியை பார்த்து பூனை கோடு போட்டுக் கொண்ட கதையாக அரசு செலவில் எடப்பாடி பழனிசாமி கதை சொல்லிவருகிறார். இதனை பொது மக்கள் நம்ப தயாராக இல்லை. தற்போது கட்சியினர், தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் பன்னீர் யார் என்று அம்பலமாகி உள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடரின் மூலம் எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். இராதாகிருட்டினன் நகர் இடைத் தேர்தலில் நான் போட்டியிட அணியமாக உள்ளேன். ஆனால் பொதுக்குழு, உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்து, வேட்பாளர் யார் என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பார்என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் திருச்சி, ராகவேந்திரா தெருவில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியதாக தினகரன், தெற்கு மாவட்டச் செயலாளர் மனோகரன், திருவரங்கம் கனகராஜ், பாபு, துரை உள்ளிட்டோர் மீது அனுமதியில்லாமல் துண்டறிக்கைகள் வழங்கியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருவரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.