Show all

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம்

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை நடுவண் அமைச்சரவைக் குழு அளித்துள்ளது.

      அப்பதவியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் வரை சிவன் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தற்போதைய தலைவர் கிரண் குமாரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து அப்பொறுப்பினை சிவன் ஏற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

      தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வானியல் பொறியியல் படிப்பையும், அதைத் தொடர்ந்து பெங்களூரில் விண்வெளி ஆராய்ச்சி முதுநிலைப் படிப்புகளையும் சிவன் நிறைவு செய்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் முனைவர் பட்டமும் அவர் பெற்றுள்ளார்.

      இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியாக 1982-ஆம் ஆண்டு இணைந்த சிவன், பல்வேறு முதன்மைப் பொறுப்புகளை வகித்தவராவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களில் அவர் பங்களித்துள்ளார். அவரது சேவையைப் பாராட்டி சத்தியபாமா பல்கலைக்கழகம் அறிவியல் துறையில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உள்பட பல்வேறு விருதுகளையும் சிவன் பெற்றுள்ளார்.

      வரும் வெள்ளிக்கிழமை31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி 40 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்  தலைவராக சிவன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,664

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.