Show all

கர்நாடக ஆளுநர் தொடங்கி வைத்த புயல் நாளை கரைகடக்கலாம் என்று அரசியல் நிலை தெரிவிக்கிறது

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டமன்றத்தில் பாஜகவின் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்த நிலையில் கர்நாடகா அரசியலில் இன்று பெரும் பரபரப்பு காட்சிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப் பெரும் கட்சி என்று சிறுபான்மைகட்சியாக உள்ள பாஜகவின் எடியூரப்பாவை பதவியேற்க ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்த உச்ச அறங்கூற்றுமன்றம், நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று இன்று உத்தரவிட்டது. அதன்படி பாஜகவைச் சேர்ந்த போப்பையா தற்காலிக பேரவைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். நாளை சட்டமன்றத்தில் என்ன நடக்கும் என்பது புதிராக உள்ளது. இந்த நிலையில், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், பெங்களூருவில் இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள உணவகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று சந்தித்து பேசினார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தனி சிறப்பு விமானம் மூலம் நாளை காலை புறப்பட்டு பெங்களூரு வருகின்றனர். இன்று பிறந்தநாளைக் கொண்டிய மஜத தலைவர் தேவ கௌடா திருப்பதி சென்று தரிசனம் செய்தார். நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றக் கூட்டம் கூடும் என்று ஆளுநர் வாஜூபாய் வாலா மாலையில் அறிவித்தார்.

இன்று பரபரப்பான காட்சிகள் நடந்த நிலையில், நாளை அதற்கும் மேற்பட்ட பரபரப்புக்காக கர்நாடக சட்டமன்றம் காத்திருக்கிறது. தற்காலிக பேரவைத் தலைவர் பதவியேற்ற பின், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதன்பிறகு, எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் கொண்டு வருவார். அதனடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டெடுப்பு நடைபெறும். கர்நாடக ஆளுநர் தொடங்கி வைத்த புயல் நாளை கரைகடக்கலாம் என்று அரசியல் நிலை தெரிவிக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,791.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.