Show all

நெஞ்சையள்ளும் சோகம்! இனப்படுகொலை நினைவு நாள்; இனப்படுகொலை கிழமை நிறைவுநாள்

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இன்று பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதை நினைவுகூறும் வகையில் வைகாசி4 (மே18) தமிழ் இனப்படுகொலை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஆறு நாட்களாக தமிழ் இனப்படுகொலை நினைவு கிழமை கடைபிடிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் உலகத் தமிழர்கள் வாழும் நாடுகளில் இனப்படுகொலை கிழமை கடைபிடிக்கப்பட்டது. இன்று முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடினர். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண சபை மேற்கொண்டிருந்தது. சடங்குகள், ஈகைச் சுடர்கள் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட உறவினர்களுக்கு தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக முள்ளிவாய்க்கால் சென்றடைந்தனர். நந்திக்கடலில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதேபோல் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலும் உணர்வுப்பூர்வமாக இனப்படுகொலை நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. 

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், முனைவர் தமிழ்நேசன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் எஸ்.நிலாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உயிர்நீர்த்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,791.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.