Show all

மகளுக்கு தாய் கருப்பை கொடை

02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தற்போது சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதன் வரிசையில்,  கருப்பை மாற்று அறுவை சிகிச்சையும் மருத்துவ உலகில் செய்யப்படுகிறது.

குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார். முன்னதாக அவருக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து வாடகைத்தாய், தத்து எடுத்தல் போன்ற பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அவர் நீங்களே உங்கள் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளார். அதன் பிறகு மீனாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்க முடிவு செய்தார். கடந்த ஆண்டு; மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தொடர்ந்து நீண்ட நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார் மீனாட்சி. உடல்நிலை சற்று தேறிய பிறகு இந்த ஆண்டு இவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், நேற்று புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மீனாட்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆசியாவிலேயே கருப்பை மாற்று அறுவை மூலம் பிறந்த முதல் குழந்தை இதுவாகும். கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் உலகளவில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்திருந்தாலும் இந்தியாவில் இதுதான் முதல்முறை. மீனாட்சிக்குப் பிறந்த குழந்தை 1450 கிராம் எடையுடன் மிகவும் நலமாக உள்ளதாகவும் தாய், குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,945.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.