Show all

பிச்சை எடுக்கும் தொழிலை, மோடி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்காமல் இருக்க வேண்டும்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாரதிய ஜனதா ஆட்சியில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுத்திருப்பதாக கூறினார்.

மேலும், ஒருவர் பக்கோடா விற்று அதில் 200 ரூபாய் லாபம் பெற்றாலும் அதுவும் வேலைவாய்ப்புதான் என்றும் மோடி கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம் கீச்சுவில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

மூன்றாண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. வேலை வாய்ப்புகளையே உருவாக்காமல் வளர்ச்சி என்று கூறிக்கொள்கிறார்கள்.

பக்கோடா விற்று பிழைத்தால் அதுவும் வேலைவாய்ப்பு என்று கூறிஇருக்கிறார்கள். பக்கோடா விற்பது வேலைவாய்ப்பு என்று தர்க்கவாதமாக எடுத்துக் கொண்டால் பிச்சை எடுப்பதும் கூட வேலைவாய்ப்புதான். ஏழைகளும், இயலாதவர்களும் வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் அது வேலைவாய்ப்பு என்று கருத முடியுமா?

பாரதிய ஜனதா வேலைவாய்ப்பு விவகாரத்தில் திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சுய வேலைகளை வேலைவாய்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பக்கோடா விற்பதும் தொழில்தான். பிச்சை எடுப்பதும் தொழில் தான். அடித்துப் பிடுங்குவதும் தொழில் தான். சாராயம் விற்பதும் தொழில்தான்.

மோடியின் தவறை முறையாக சுட்டிக் காட்டாமல், சிதம்பரம் குழப்பியிருக்கிறார் என்பதே உண்மை.

அடித்துப் பிடுங்குவதை வரிவிதிப்பின் மூலமாகவும், சாராயம் விற்பதை டாஸ்மாக் மூலமாகவும் நடுவண் அரசும் மாநில அரசும் செய்து கொண்டுதாம் இருக்கின்றன.

இந்த அரசுகளால், மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வரும் போது அதையும் மோடி கார்ப்பரேட் பினாமிகளிடம் ஒப்படைக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் மோடி குறித்த மிகச் சரியான எதிர் விமர்சனமாக இருக்கமுடியும்.

என் கணவனும் கச்சேரிக்குப் போகிறான் என்று அனுபவம் உள்ள சிதம்பரம் இப்படி வெட்டியாகப் பேசக் கூடாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,682

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.