Show all

பத்து ரூபாய் நாணயம் செல்லும்! ஆனால் செல்லாது

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுச்சேரி வில்லயனூரில் ஒரு வங்கியில் ரூ10 நாணயத்தை வாங்க அந்த வங்கியின் காசாளர் மறுக்கும் காணொளி தீயாகப் பரவி வருகிறது.

கடந்த 23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5118 (08.11.2016) அன்று நள்ளிரவில் ரூ.500, ரூ. 1000 ரூபாய்தாள்கள் இனி செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.10 நாணயமும் செல்லாது என்று தகவல் பரவியது. இதையடுத்து ரூ.10 நாணயம் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து தகவலை வதந்தி ஆக்கியது.

ரிசர்வ் வங்கியின் விளக்கத்தை நகல் எடுத்து பெரும்பாலான கடைகளில் வியாபாரிகள் ஒட்டி பத்து ரூபாய் நாணயத்தை செல்லுபடியாக்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முயற்சி மக்களிடம் இருந்து ரூ10 நாணயங்களைப் பெறுவதற்கு மட்டும் தான் பயன்படுகிறது பெற்ற நாணயங்களை மாற்ற வங்கிகளைத்தான் அணுக வேண்டியுள்ளது. பெரும்பாலான வங்கிகள் ரூ10 நாணயத்தை பெறுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏதாவது சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டுதாம் இருக்கின்றன.

இந்நிலையில் புதுச்சேரி வில்லயனூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.10 நாணயத்தை பெற காசாளர் மறுப்பு தெரிவிக்கும் கணொளி தீயாகப் பரவி வருகிறது.

இதை வங்கி மேலாளரிடம் வாடிக்கையாளர்கள் முறையிட்டனர். அப்போது அவரும் ரூ.10 நாணயங்களை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து ரூ.10 நாணயத்தை வாங்க மாட்டோம் என எழுதி கையொப்பமிடுமாறு வாடிக்கையாளர்கள் வலியுறுத்தினர். அதற்கு அவர் நீங்கள் எழுதிக் கொடுங்கள், நான் கையெழுத்து போடுகிறேன் என்றார்.

சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழிக் கேற்ப, மோடி அரசின் ரூபாய்தாள் செல்லாது அறிவிப்பைத் தொடர்ந்து பற்பல வதந்திகள் பரவிக் கொண்டேதாம் இருக்கின்றன. மக்களும், பணம் கையாளத் தேவையிருக்கிற அனைத்து நிறுவனங்களும் அல்லாடிக் கொண்டுதாம் இருக்கின்றன ஒவ்வொரு நாளும் புதுப் புதுக் கோணங்களில்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,645

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.