Show all

இந்திய அரசியலுக்கு புதியமொழி தேடும் தெலங்கானா முதல்வர்! 3வதுஅணி: அந்த பழையமொழி தேவையில்லை

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து, மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், எதிர்வரும் காலகட்டங்களில் ஏற்படக்கூடிய அரசியல் சூழல்களை அணுகுவது குறித்தும்  நீண்ட நேரம் என்னிடம் விவாதித்தார். தலையாயத்துவமாக, மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்கான கூடுதல் நிதி பங்கீட்டை உரிமையோடு பெறுவது, நடுவண் அரசின் சர்வாதிகாரப் போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் இருப்பதால், அப்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றார்  ஸ்டாலின்.

தொடர்ந்து, சந்திரசேகர ராவ் கூறியதாவது: அரசியலில் மாற்றம் தேவை என நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ளது. மூன்றாவது  அணியா, 4-ஆவது அணியா? என்பது கேள்வி அல்ல. ஒரு அணியாக மட்டுமே உருவெடுப்போம்.  அணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை என்றார் அவர்.

ஊடகங்களுக்கு தேர்தல் என்றாலே, மூன்றாவது அணி, நான்காவது அணி என்பதைத் தவிர வேறு மொழிகள் தெரியாது. அந்த மொழியில் அரசியல்வாதிகளை அணுகவும் வழி நடத்தவும் செய்வார்கள். ஆனால், காங்கிரஸ் பாஜக அல்லாத அவர்களை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற கட்சிகளுக்கு வேறு ஒரு புதிய மொழியும் அது சார்ந்த வழியும் தேவையாக இருக்கிறது. மூன்றாவது நான்காவது அணி அமைத்தால் காங்கிரஸ் அல்லது பாஜகவிற்கு தான் இலாபம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஊடகங்கள் அப்படியானதொரு வழிக்கும், மொழிக்கும் மக்கள் சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். ஏனென்றால் பெரும்பாலன ஊடகங்கள், காங்கிரசோ, பாஜகவோ மீட்டும் தீயில்தான் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன. 

பாஜக, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக மாற்றுக்கட்சிகளுக்கு வேறுவகை மொழியும் வழியும் கிடைத்திட நாம் வாழ்த்துவோம்! இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்றதாழ்வில்லாத சம தகுதியோடு உலா வரட்டும்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,773.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.