Show all

தாய்மொழி வழிக்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு பொது நுழைவுத்தேர்வு நெருக்கடி

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு கல்வி ஆண்டில் பொது நுழைவுத்தேர்வு கிடையாது.

இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் உத்தரவிட்டது.

மே 1, ஜூலை 24 என இரு கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வை நடத்தி முடிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) சார்பில் முதற்கட்ட நுழைவுத்தேர்வு கடந்த 1-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இந்தப் பொது நுழைவுத்தேர்வால்,

இந்தி அல்லாத மாநிலத்தில் மாநில மொழிகளில்  தாய்மொழிவழி பயிலும் மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பதே எதார்த்தமான உண்மை.

இந்திய ஆட்சிப்பணி தேர்வு போலவே தத்தம் தாய்மொழியில் இந்த நுழைவுத் தேர்வும் எழுத அனுமதிக்கப் படும் என்று உத்தரவாதம் அளிக்கப் பட்டாலே போதும்.

கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப் படுவர் என்பதெல்லாம் தாய்மொழி ஆதரவு நிலை என்பது தேசியத்திற்கு எதிரானதோ யென்கிற அச்சத்தின் பாற்பட்ட மாற்றுச் சொல்லாடலே.

மாநிலங்களே சொந்தமாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், பொது நுழைவுத்தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பிலும், தனியார் மருத்துவ கல்லூரி அமைப்புகளின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க மாநில அரசுகளோ அல்லது கல்லூரிகளோ தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது என்றும்,

அனைத்து மாநிலங்களும் பொது நுழைவுத்தேர்வையே பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

 

உச்சநீதிமன்றத்தின்  இந்த இடைக்கால உத்தரவினால் தமிழகம், மராட்டியம், குஜராத், கர்நாடகா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கு மட்டுமாவது பொது நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று பல மாநில அரசுகள் தரப்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பிலும் நடுவண் அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமையன்று நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் 18 மாநிலங்களின் நலவாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது நுழைவுத்தேர்வு குறித்து எதிர்மறையான கருத்துகளை முன்வைத்தன.

 

இதுதவிர, நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடுவண் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாடு முழுவதும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வை நடப்பு ஆண்டு மட்டும் ரத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான அவசர சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இந்த அவசர சட்டம் விரைவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

 

அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறும் வகையில் நடுவண் அமைச்சர் ஜே.பி.நட்டா உடனடியாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து விளக்கம் அளிப்பார் என்றும் தெரிகிறது.

அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், நடப்பு ஆண்டில், மாநில அரசுகள் சொந்தமாக நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்யலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆனால், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மருத்துவ படிப்புகளில் சேர அனைத்து மாநில மாணவர்களும் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.

இதற்கிடையே, ஏற்கனவே, பொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான தேதிகளை அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும்  நிறுவனம்,

நடுவண் அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.மேலும், அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை மாணவர்கள் வரவேற்கிறார்கள். ஆனால், அதற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பித்தால், பணக்கார மாணவர்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் பெருமளவு நன்கொடை கொடுத்து இருக்கை வாங்கி விடுவார்கள். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு தரமான மருத்துவ கல்வி கிடைக்காமல் போய்விடும். ஆகவே, அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.