Show all

ஆளுநரின் ஆசிகளோடு 'சிகிச்சைத் தாமரை' தொடங்கி விட்டது! காங்கிரஸ், மஜத அலைமோதல்

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணியாக காங்கிரஸ், மஜத ஆட்சியமைக்க பலம் பெற்றிருந்த போதும், ஊழலுக்கு அழைப்பு விடுக்கும் விதமான, ஆளுநரின் அழைப்பின் பேரில், பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் அக்கட்சி 'சிகிச்சை தாமரை' மூலம் காங்கிரஸ், மஜத சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் பெல்லாரியில் உள்ள விஜயநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்ஆனந்த் சிங், ரெட்டி சகோதரர்களின் நண்பரான ஸ்ரீராமலுவை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதேபோல ரெய்ச்சூர் மாவட்டம், மாஸ்கி தொகுதியில் வென்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் கவுடா பாட்டீல் பெங்களூருவில் உள்ள ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பாஜக இருப்பிடத்துக்கு சென்றுள்ளார். இதற்கான ஏற்பாட்டை ரெட்டி சகோதரர்களில் ஒருவரான சோமசேகர ரெட்டி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ், மஜத தலைவர்கள் எடியூரப்பாவின் பதவி ஏற்பையும், ஆளுநரை திரும்ப பெறக் கோரியும் நேற்று பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக தர்ணா செய்தனர். கர்நாடக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற எடியூரப்பா பெங்களூருவில் 4 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். மேலும் மைசூரு சாலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்த ஈகள்டன் சொகுசு விடுதிக்கு போடப்பட்ட காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், மஜத மேலிடம் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கும் பொருட்டு கேரள மாநிலம் கொச்சி மற்றும் கோவா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மேற்கொண்டுள்ளார். இவர் கடந்த குஜராத் மாநிலங்களவை தேர்தலின்போது அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை பெங்களூருவில் தங்கவைத்து பாதுகாத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,791. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.