Show all

சிறப்பு அறங்கூற்றுமன்றம் தொடக்கம்! பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்க

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு அறங்கூற்றுமன்றம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று தொடங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்க, தனி அறங்கூற்றுமன்றங்கள் அமைக்க வேண்டும் என, கடந்த ஆண்டு உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டில்லி, தெலுங்கானா உட்பட, 11 மாநிலங்களில், 12 சிறப்பு அறங்கூற்றுமன்றங்கள் அமைக்கப்படும் என, நடுவண் அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பான நினைவூட்டல் மடல்களும், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில், சிறப்பு அறங்கூற்றுமன்றம் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசு, அண்மையில் ஆணை வெளியிட்டது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின், முதல் தளத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு அறங்கூற்றுமன்றம் நேற்று தொடங்கப்பட்டது.

அதை, உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர், குலுவாடி ரமேஷ் திறந்து வைத்தார். சிறப்பு அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராக சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை உயர் அறங்கூற்றுமன்;ற வளாகத்தில் உள்ள, ஏழாவது கூடுதல் அமர்வு அறங்கூற்றுவராக இருந்தார். மேலும், அறங்கூற்றுமன்;ற அலுவலர் உட்பட, எட்டு பேர், இங்கு பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, அவதூறாக பேசியதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது, சென்னை முதன்மை அமர்வு அறங்கூற்றுமன்றத்தில், அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்குதொடர்ந்திருந்தார். நிலுவையில் இருந்த இந்த வழக்கு, சிறப்பு அறங்கூற்றுமன்றத்துக்கு மாற்றப் பட்டது. அறங்கூற்றுமன்றம் தொடங்கப்பட்ட முதல் நாளில், ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பின், விசாரணை, செவ்வாய் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,917.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.