Show all

ஹெலிகாப்டர்களை வாங்குவதில் லஞ்சம் கைமாறியதில் சோனியாவுக்குத் தொடர்பு

இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதில் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குத் தொடர்பு இருப்பதாக இத்தாலி நீதிமன்றம் கூறியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரையும் முடக்கி வரும் காங்கிரஸ் கட்சிக்கு, ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி நெருக்கடி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விஐபிக்களின் பயணத்துக்காக இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு காங்கிரஸ் தலைமையிலான நடுவண் அரசு கடந்த 2010ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது.

ரூ.3600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் இந்தியத் தரப்பில் சிலருக்கு 10 சதவீதம் (ரூ.360 கோடி) லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி தியாகி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனிடையே, இந்தியத் தரப்புக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக இத்தாலியில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன அதிபர் கியூசெப் ஓர்ஸி மற்றும் சில இடைத்தரகர்கள் மீது அந்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கியூசெப் ஓர்ஸி குற்றவாளி என்று இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மேற்கண்ட நிறுவனம் எவ்வாறு லஞ்சம் கொடுத்ததை என்பதை விவரித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன் விவரம் வருமாறு:

இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது அரசியல் ஆலோசகர் அகமது படேல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை அணுகி அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் எவ்வாறு ஆதரவு திரட்டியது என்பதை இத்தாலி நீதிமன்றம் விவரித்துள்ளது.

அதன்படி, இத்தாலி நிறுவனத்திடம் இருந்து அகமது படேல் ரூ.120 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார். இது தொடர்பாக இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட பீட்டர் ஹியூலெட் எழுதி வைத்திருந்த குறிப்புகள் இத்தாலி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும் இந்த பேரத்தில் உந்து சக்தியாக சோனியா இருந்தார் என்று அந்த இடைத்தரகர் அதில் குறிப்பிட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், எம்.கே.நாராயணன், வினய் சிங் ஆகியோரின் பெயர்கள் அதில் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இடைத்தரகர் எழுதிய அந்தக் குறிப்பின் நகல் மத்திய ஆளும்கட்சியான பாஜகவுக்குக் கிடைத்திருப்பதாகவும், இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸுக்கு கடும் நெருக்கடி அளிக்க அக்கட்சி வியூகம் வகுத்திருப்பதாகவும் தில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், உத்தரகண்ட் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது.

எனவே அக்கட்சியை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ள ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தையும், இஷ்ரத் ஜஹான் விவகாரத்தையும் எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில், பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிவடைந்த பிறகு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குஜராத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான், லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது உலகம் முழுவதும் தெரியும்.

ஆனால், காங்கிரஸும், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரமும் அவரைப் பயங்கரவாதி இல்லை என்று நிரூபிக்க முயலுகின்றனர்

என்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அருண் ஜேட்லி தெரிவித்தார். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், முக்கியப் பிரமுகர்களுக்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்குவதில் நடைபெற்ற ஊழல் விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்னைகளை எதிர்கொள்ளவும், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் முக்தார் அப்பாஸ் நக்வி.

இதனிடையே, ஹெலிகாப்டர் பேரத்தில் தொடர்புடையவர்களின் பெயர்களை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி தெரிவிக்க வேண்டும் என்று நடுவண் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார். இந்த ஊழலில் ஈடுபட்ட இத்தாலியர்கள் தண்டிக்கப்பட்டு விட்டனர்.

இந்த ஊழலில் காங்கிரஸ் தலைவர்களில் யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கின்றனரா? என்று அந்தோணி தெரிவிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.