Show all

தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் 2016ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நாளை முதல் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 35,53,353 மாணவர்களுக்கு பதிவுகள் செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 2016ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் நாளை வழங்கப்பட உள்ளது. அதனால் நாளை முதல் வருகிற 1ம் தேதி வரை 15 நாட்களுக்கு படித்த பள்ளியிலேயே பதிவு செய்து வழங்குவதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 3,893 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படும். எனவே, மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று வர வேண்டும். மேலும், மெட்ரிக் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பயின்ற மாணவர்களும் தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் (http://tnvelaivaaippu.gov.in) பதிவு செய்யலாம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.