Show all

மோடியால் ஸ்மிருதி இரானி ஓரங்கட்டப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

நாடாளுமன்ற விவகார அமைச்சரவை குழுவில் இருந்து நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இரானி நீக்கப்பட்டுள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது துகிலியல்துறைக்கு மாற்றப்பட்டார். அவரது பொறுப்பு, இணை அமைச்சராக இருந்து கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜவ்டேகர் வசம் ஒப்படைக்கப்பட்டது. மோடி அமைச்சரவையில் மிகவும் முக்கியத்துவம் பெற்று இருந்த இரானி திடீரென மாற்றப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் ஐதராபாத் பல்கலை மாணவர் விவகாரம் உள்ளிட்ட விஷயங்களை திறம்பட கையாளாததால் இந்த மாற்றக்கு உட்படுத்தப்பட்டார் என்று ஒரு பிரிவினரும், உபி தேர்தலில் இரானியை முன்னிறுத்த வசதியாக இலாகா மாற்றம் செய்யப்பட்டார் என்று மற்றொரு பிரிவினரும் கூறி வந்தனர். இந்நிலையில், தற்போது மத்திய அமைச்சரவை குழுக்களை மோடி மாற்றி அமைத்துள்ளார். அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் இடம் பிடித்திருந்த ஸ்மிருதி இரானி, அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பிரகாஷ் ஜவ்டேகர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே அந்த குழுவில் சிறப்பு அழைப்பாளராக ஜவ்டேகர் இடம்பெற்று இருந்தார். தற்போது நிரந்தரமாக இடம்பிடித்துள்ளார். எனவே மோடியால் ஸ்மிருதி இரானி ஓரங்கட்டப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல் சட்டத்துறை அமைச்சர் பதவியை இழந்த சதானந்த கவுடாவும் இக்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்ட ரவி சங்கர் பிரசாத் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். நடுவண் அமைச்சரவையில் இருந்து விலகிய நஜ்மா ஹெப்துல்லாவும் நீக்கப்பட்டுள்ளார். நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் செயல்படும் இந்தக் குழுவில் 11 உறுப்பினர்களும், 3 சிறப்பு அழைப்பாளர்களும் உண்டு. நடுவண் அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, ராம்விலாஸ் பஸ்வான், அனந்தகுமார், தற்போது பிரகாஷ் ஜவ்டேகர், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களாக இணை அமைச்சர்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.பி.சவுத்ரி, முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.