Show all

அச்சத்தில் சியோமி வாடிக்கையாளர்கள்! மின்னேற்றத்தின் போது வெடித்த சியோமி மிடுக்குப்பேசி

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சியோமி நிறுவனத்தின் எம்ஐஏஒன் என்ற மிடுக்குப்பேசி மின்னேற்றம் செய்யும்போது வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக ரெட்மி வரிசை மிடுக்குப்பேசிகளின் மீது அதிகம் சூடாகும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவது வழக்கமானது. சூடாவது உண்மைதான் என்றாலும் வெடிக்குமா என்பது சந்தேகம்தான். கடந்த ஆண்டு கூட சில ரெட்மி மிடுக்குப்பேசிகள் வெடித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால், அதன்பிறகு ஏதும் நடக்கவில்லை. இந்த நிலையில், ஒருவர் அவருடைய நண்பரின் எம்ஐஏஒன் என்ற மிடுக்குப்பேசி மின்னேற்றம் செய்யும்போது வெடித்ததாகத் தகவலைப் பதிவிட்டுள்ளார்.

எனது நண்பர் தூங்கும்போது எம்ஐஏஒன் என்ற மிடுக்குப்பேசியை அருகில் வைத்திருந்தார். அப்பொழுது அது வெடித்துச் சிதறியது. வெளிப்புறத்தில் உறை மட்டும் இல்லையென்றால் இந்த வெடிப்பின்போது அவர் அதிகமாகக் காயம் அடைந்திருக்கக்கூடும். அந்த மிடுக்குப்பேசி வாங்கி எட்டு மாதங்கள் ஆகியும் இதற்கு முன்பு வரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே யாரும் எம்ஐஏஒன் என்ற மிடுக்குப்பேசியை அருகில் வைத்து உறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்திருக்கிறார். 

சியோமி நிறுவனம் இந்தச் சம்பவத்தைப் பற்றி விசாரித்த பிறகே இது உண்மையாகவே நடந்ததா, அப்படியென்றால் எதற்காக வெடித்தது என்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,930.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.