Show all

சுட்டுத் தள்ளுங்கள்! தொடர்வண்டிகளைச் சேதப்படுத்துபவர்களை- நான் உத்தரவிடுகிறேன்- அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

நான் உத்தரவிடுகிறேன்! தொடர்வண்டிகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை யாரேனும் சேதப்படுத்தினால் அவர்களைப் பார்த்த இடத்தில் சுட்டுத்தள்ளுங்கள் என்று தொடர்வண்டித்துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என்று பல்வேறு தரப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நேற்று மேற்குவங்கத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பெரிய அளவில் பேரணி நடைபெற்றது. அதில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். முன்னதாக, மேற்கு வங்கத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தில் ஐந்து தொடர்வண்டிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலுள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் போராட்டங்கள் குறித்து பேசிய தொடர்வண்டித்துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, ‘மாவட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்வண்டித்துறை அதிகாரிகளை நான் கடுமையாக எச்சரிக்கிறேன். தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பொதுச் சொத்துகளை யாரேனும் சேதப்படுத்தினால், அவர்களைக் கண்டவுடன சுட்டுத் தள்ளுங்கள். ஒரு அமைச்சராக நான் உத்தரவிடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,369.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.