Show all

இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் பெருமளவில் கட்டுப்பாடுகள்.

இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் பெருமளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், பொது இடங்களில் பாலியல் கொடுமைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு இந்தியாவில் கடுமையான சட்டங்கள் இல்லை என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் சுரங்கப் பணிகளிலும், சுமை தூக்கும் பணிகளிலும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களுக்கு சுகாதாரக் குறைவு ஏற்படும், உயிருக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, சட்டமும் அவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கிறது.

மேலும், இந்தியாவில் பொது இடங்களில் பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கென சட்டங்கள் இல்லை. ஆனால், மற்ற 18 நாடுகளில் பெண்களைப் பாதுகாப்பதற்கென சட்டங்கள் உள்ளன.

அதேநேரத்தில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வாரியத்தில் ஒரு பெண்உறுப்பினராவது இடம்பெற வேண்டும் என்ற விதியை, ஆசிய கண்டத்தில் உள்ள 9 வளரும் நாடுகளில் இந்தியா மட்டும் அமல்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையை தயாரித்த சாரா இக்பால் என்பவர் கூறியதாவது:

இந்தியாவின் தொழிற்சாலைகள் சட்டம், பிரிட்டனின் சட்டத்தில் இருந்து தழுவப்பட்டது.

தொழிற்சாலைகளில் பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஒரே மாதிரியாக சட்டங்கள் உள்ளன.

பெண்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில், ஜமைக்கா தனது தொழிற்சாலைகள் சட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருத்தம் கொண்டு வந்தது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வாரியத்தில் ஒரு பெண் உறுப்பினராவது இடம்பெற வேண்டும் என்ற விதியை இந்தியா அமல்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார் அவர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.