Show all

தோசை விலை அதிகரிக்க காரணம் ரகுராம் ராஜனின் விளக்கம்

தோசை மாஸ்டருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டதும், புதிய தொழில் நுட்பம் இல்லாததும்தான் தோசை விலை அதிகரிக்க காரணம் என ரகுராம்  ராஜன் கூறியுள்ளார். பண வீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை முதன்மை இலக்காக கொண்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதை காரணம் காட்டித்தான்  கடன் வட்டி விகிதத்தை அவ்வளவு எளிதாக ரிசர்வ் வங்கி குறைப்பதில்லை. கடந்த மாதம் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரகுராம் ராஜன்,

பண  வீக்கம் என்பது நாட்டின் வளர்ச்சியை பாதிக்க வல்லது. இது பற்றி தோசை பொருளாதாரம் மூலம் விளக்குகிறேன். ஓய்வூதியம் பெறும் முதியவர் ஓட்டலில்  தோசை வாங்க விரும்புகிறார். தோசை விலை 50 ரூபாய். அவருக்கு வங்கி டெபாசிட் மூலம் ஆண்டு இறுதியில் வட்டியுடன் அசல் சேர்த்து 10 ஆயிரம்  ரூபாய் கிடைக்கிறது. ரூ. 10 ஆயிரத்துக்கு 50 ரூபாய் வீதம் 200 தோசை வாங்கலாம்.  சரி, பணவீக்கத்தால் ஒரு பக்கம் அவரின் வங்கி டெபாசிட் மீதான வட்டி  குறைகிறது.

 

இன்னொரு பக்கம் தோசை விலையும் 10 சதவீதம் ஏறி விடுகிறது. விளைவு, அவரால் 10 ஆயிரம் ரூபாய் வந்தாலும் 200க்கு பதில் 182 தோசைதான் வாங்க  முடிந்தது என தனி மனிதனை பண வீக்கம் எவ்வளவு பாதிக்கிறது என்று விளக்கினார் ரகுராம் ராஜன்.   இந்நிலையில், கொச்சியில் நடந்த வங்கி  நிகழ்ச்சியில் பங்கேற்ற ரகுராம் ராஜனிடம் ‘பண வீக்கம் உயரும்போது தோசை விலை உயர்கிறது. ஆனால் பண வீக்கம் குறைந்தால் தோசை விலை  குறையாதது ஏன்?’ என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்து ரகுராம் ராஜன் கூறியதாவது: எந்த ஒரு உற்பத்தி துறையிலும் தொழில்  நுட்பம் வளர வேண்டும். தொழிற்சாலைகளிலும் உற்பத்தி அதிகரிப்புக்கு ஏற்ப தொழில் நுட்பம் உள்ளது. சில துறைகளில் இப்படி தொழில்நுட்ப வளர்ச்சி  ஏற்படுவது இல்லை. அதாவது, உற்பத்தி முறையில் தொழில்நுட்ப ரீதியாக மாற்றம் வரவேண்டும்.

 

ஏனெனில், தொழில் நுட்பம் வளரும்போது உற்பத்தி அதிகரித்து அவற்றின் விலையும் குறையும்.  ஆனால், தோசை அப்படியல்ல. ஒரு மாஸ்டர்  தோசைக்கல்லில் மாவை ஊற்றி வட்டமாக சுற்றி தோசை சுடுகிறார். இப்படித்தான் காலம்காலமாக நடந்து வருகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. புது  தொழில்நுட்பமும் இதற்கு வரவில்லை. தோசை மாஸ்டர்தான் தோசை வார்க்கிறார். அவருக்கு சம்பளம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் கேரளா  போன்ற மாநிலங்களில் சம்பள விகிதம் எப்போதுமே அதிகம்தான். தொழிற்நுட்ப வளர்ச்சி இல்லாத துறைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் விலை அதிகம்.  அதுபோலதான் தோசை விலையும் அதிகரிக்கிறது. இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.