Show all

மதுவிலக்கு அமலில் உள்ள பிகாரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மது விருந்து

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பிகாரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வினய் வர்மா தனது நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பதைப் போன்ற காணொளி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிகார் மாநிலம் நர்காட்டியாகஞ்ச் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வினய் வர்மா.

இவர் தனது இல்லத்தில் நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பது போன்ற காணொளி, தொலைக்காட்சி ஒன்றில் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

பிகாரில் பூரண மது விலக்கு அமலில் இருக்கும் சமயத்தில், மாநிலத்தில் ஆளும் மதச்சார்பற்ற மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரே மது விருந்து அளிப்பது போன்ற காணொளி, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில காணொளி, சர்ச்சையில் சிக்கிய சட்டமன்ற உறுப்பினர் வினய் குமார் தனது ஆதரவாளர்களுடன் சிகர்பூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை வந்து புகார் மனு அளித்தார். தான் மது விருந்து அளிப்பது போன்று வெளியாகியுள்ள காணொளி முற்றிலும் போலியானது. இந்தச் சதிச்செயலுக்குப் பின்னணியில் சில செய்தியாளர்கள் இருக்கின்றனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய போது, சட்டமன்ற உறுப்பினர் வினய் வர்மா மீது காவல்துறையினருக்குச் சந்தேகம் எழுந்ததாகத் தெரிகிறது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த வினய் வர்மாவின் ஆதரவாளர்கள், காவல் நிலையத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்டு, அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றுவிட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, மது விருந்து சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வினய் வர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிகார் மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி கூறியதாவது:

மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே மது விருந்து அளித்திருப்பது வெட்கக்கேடானது. அவருக்கு மது எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்துவதுடன் அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது முதல்வர் நிதீஷ் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சுஷில் குமார் மோடி.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் மது விருந்து அளித்தது உறுதியாகும்பட்சத்தில் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

என பிகார் காங்கிரஸ் தலைவரும், கல்வியமைச்சருமான அசோக் சௌத்ரி தெரிவித்தார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.