Show all

முதல்வருக்கு வாழ்த்துக்கள்! நீட் விலக்கு சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் பெற்றுவர

இன்று மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நீட் விலக்கு சட்டமுன்வரைவு தற்போது குடியரசுத் தலைவர் முர்மு கையில் உள்ளது. அவர் இதற்கு ஒப்புதல் அளித்தால் அது சட்டமாகும். முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டத்தை அங்கீகரிக்க கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இன்று மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இந்தப் பயணத்தின் நோக்கம்- குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதும் நீட் விலக்கு சட்டமுன்வரைவுக்கு ஒப்பதல் கேட்பதும் என்று தெரியவருகிறது.

நாளை காலை 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும், 11.30 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளார். 

நீட் விலக்கு சட்டமுன்வரைவு டெல்லி உள்ளது. உள்துறை அமைச்சகம் இதை சோதனை செய்துவிட்டது. இப்போது சட்டம் குடியரசுத் தலைவர் முர்மு கையில் உள்ளது. அவர் இதற்கு ஒப்புதல் அளித்தால் அது சட்டமாகும். இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து சட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல்வர் ஸ்டாலின் நாளையே தலைமைஅமைச்சர் மோடியை சந்திக்க நேரம் பெற்றுள்ளார். நாளை மாலை இந்தச் சந்திப்பு நடக்க உள்ளது. தலைமைஅமைச்சர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இவர்கள் சந்திக்க 30 மணித்துளிகள் நேரம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீட் விலக்கு சட்டமுன்வரைவு, காவிரி பாடுகள் உள்ளிட்ட பல விடையங்கள் பற்றி மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,342.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.