Show all

கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு! தமிழகம்-கர்நாடக இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே, ஆடுதாண்டும்காவிரியில் ஆய்வுநடத்த அனுமதி

தமிழகம்-கர்நாடக இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே, ஆடுதாண்டும்காவிரியில் ஆய்வுநடத்த அனுமதி என்று தெளிவுபடுத்தி, காவிரி ஆற்றின் குறுக்கே ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முகமாக ஆய்வு செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளது. 

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காவிரி ஆற்றின் குறுக்கே ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முகமாக ஆய்வு செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளது. 

பின்லாந்து நாட்டின் ஹெல்சிங்கி நகரில் 53 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் அவை  சட்ட வல்லுநர்களை அழைத்து ஆற்று நீர் பங்கீடு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் ஆற்று நீர் பிரச்னைகளை தீர்க்க உலக நாடுகள் ஆறுகள் பாயும் எல்லாப் பகுதிகளுக்கும் (நாடுகள், மாநிலங்கள்) அதன் மீது உரிமை உண்டு,  (பழங்கால) பழக்க வழக்கங்கள், ஒப்பந்தங்கள், உரிமைகள் அடிப்படையில் பங்கீடு பிரச்னையில் தீர்வு காண வேண்டும்,  உண்மையான விவரங்கள் அடிப்படையில் பிரச்னைகளை தீர்க்க வேண்டும், வடிநிலப்பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் என எல்லா நீர் நிலைகளையும் ஒன்றாக இணைத்து கணக்கீடு செய்ய வேண்டும், ஒரு நாட்டின் ஆற்று நீர் உரிமையில் மற்ற நாடுகள் குறுக்கீடு செய்யக் கூடாது’ என்பது உட்பட பல்வேறு கோட்பாடுகளை பரிந்துரை செய்தது.  உலக நாடுகள் ஹெல்சிங்கி கோட்பாடுகளை கடைப்பிடித்து ஆற்று நீர் பங்கீடு பிரச்னைகள் தீர்த்துக் கொள்கின்றன.

ஆனால்- இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து, கர்நாடகத்தில் அமையும் எந்த அரசும், காவிரியில் தொடர்ந்து அணைகள் கட்டி காவிரியின் உரிமையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்றே கருதி வருகின்றன. புயல் வெள்ளக் காலங்களில் உபரி நீரை வெளியேற்றுவதற்கான வடிகாலக மட்டும் பல்லாயிரம் ஆண்டுகளாக காவிரியில் பயன்பெற்று வந்த மண்ணை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறது. 

விதிகளை மீறி தொடர்ந்து அணைகளைக் கட்டும் முயற்சிகளை மேற்கொண்டே வருகிறது கர்நாடகம். அந்தவகையாக ஆடுதாண்டும் காவிரிப் பகுதியிலும் ஒரு அணை கட்டி காவிரி நீரைத் தடுத்து சேமித்துக் கொள்ள ஆசை கொண்டு அணை கட்டுவதற்காக ஆய்வு நடத்த நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் தொடர் வலியுறுத்தல் காரணமாக கர்நாடகாவின் கோரிக்கையை நடுவண் அரசு நிராகரித்துள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர்கள் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் - கர்நாடக இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே ஆடுதாண்டும் அணை கட்ட அனுமதி அளிக்க முடியும். அணை கட்டுவதற்கு மாற்று இடத்தை குறிப்பிட வேண்டும். மாற்று இடத்தை குறிப்பிடாததால் விரிவான ஆய்வு நடத்த அனுமதி அளிக்க முடியாது எனவும் நிபுணர்கள் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,238.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.