Show all

பணத்தையும் பதவியையும் காட்டி, மாற்று கட்சியினரை பாஜக இழுத்து வருகிறது

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, தாமரைஅதிரடி திட்டத்தை தொடங்கி, அதன் மூலம் மாற்றுக் கட்சியினரை வேகமாக பாஜகவுக்கு இழுத்து வருகிறார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

     கடந்த 2008 சட்டப்பேரவை தேர்தலின் போது, தாமரைஅதிரடி திட்டத்தின் மூலம் மாற்றுக் கட்சியின் முக்கிய தலைவர்களை பாஜகவுக்கு எடியூரப்பா இழுத்தார். இதற்காக பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

     தற்போது, கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா மீண்டும்,

தாமரைஅதிரடி திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன்மூலம் தலையாய எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்களை பாஜகவுக்கு இழுக்க முயற்சித்து வருகிறார்.

     முதல் கட்டமாக காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மகாதேவ பிரசாத்தை பாஜகவுக்கு வரும்படி அழைத்தார். முதல்வர் சித்தராமையாவைப் பழிவாங்கும் நோக்கத்தில் மகாதேவ பிரசாத்தும் பாஜகவில் இணைந்து, மைசூரு மாகாணத்தில் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். மகாதேவ பிரசாத்தின் வருகையால் மைசூரு, சாம்ராஜ்நகர், நஞ்சன் கூடு உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

     இதையடுத்து மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரு மான ஜெயபிரகாஷ் ஹெக்டே தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன் தினம் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஹொசப்பேட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்றஉறுப்பினர் ரத்தன் சிங் நேற்று பெங்களூருவில் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

     இதேபோல முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜதவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் நேற்று எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

     அடுத்தடுத்து காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில், மேலும் சிலரை இழுக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். குறிப்பாக தென் கர்நாடகா, வட கர்நாடகா ஆகிய மாகாணங்களில் பாஜகவுக்கு பலம் சேர்க்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களை இழுக்க வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸில் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பாஜகவுக்கு இழுக்க எடியூரப்பா தீவிரமாக முயன்று வருகிறார்.

     இது தொடர்பாக எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள எடியூரப்பா, பாஜகவில் இணைந்தால் துணை குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதனால் மனம் மாறியுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா பாஜக மேலிடத் தலைவர்கள் உரிய உறுதி அளிக்க வேண்டும். அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு எடியூரப்பாவிடம் தெரிவித்துள்ளதாகக் தெரிகிறது.

     இதையடுத்து எடியூரப்பா பாஜக தலைவர் அமித் ஷாவிடம் பேசியுள்ளார். எஸ்.எம்.கிருஷ்ணா வந்தால் கர்நாடகாவில் பாஜகவின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். அவருக்கு தேவையான பதவியை வழங்குமாறு கோரியதாக கூறப் படுகிறது. இதற்கு அமித் ஷாவும் சம்மதம் தெரிவித்துள்ளதால், எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைவார் என கூறப்படுகிறது.

     இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறியபோது, ‘எடியூரப்பாவின் தாமரைஅதிரடி

திட்டத்தை மக்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸில் எல்லா பலனையும் அனுபவித்துவிட்டு, வேறுகட்சிக்கு செல்வோருக்கு மக்கள் தேர்தல் நேரத்தில் தக்க பாடம் கற்பிப்பார்கள். பணத்தையும் பதவியையும் காட்டி, மாற்று கட்சியினரை பாஜக இழுத்து வருகிறது. அந்த கட்சியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.