Show all

அரசியல் காரணம் இருந்ததாக மல்லையா விளக்கம்! கடனை முடித்துத் தருவதற்கான வாய்ப்புகள் வங்கிகளால் வழங்கப் படாமைக்கு

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  தனது வங்கிக் கடன் குறித்து, லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். 

லண்டன் அறங்கூற்றுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா, நான் நாட்டை விட்டு கிளம்பும் முன் கடன்களை திருப்பிச் செலுத்துவது குறித்து பேச நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தேன் இதுதான் உண்மை. எனது கடன்திருப்புதல் கடிதங்களுக்கு வங்கிகள் ஆட்சேபணைகளைப் பதிவு செய்துள்ளன. 

நான் அரசியல் கால்பந்தாகிவிட்டேன். என் மனசாட்சி தெளிவாக உள்ளது. ரூ.15,000 கோடி மதிப்புள்ள என் சொத்துக்களை கர்நாடகா அறங்கூற்றுமன்றத்தில் சமர்ப்பித்தேன். நான் நிச்சயமாக பலிகடாதான். நான் பலிகடாவாக உணர்கிறேன். இரு கட்சிகளுக்கும் என்னைப் பிடிக்கததன் நோக்கம் புரியவில்லை.

நான் ஏன் வெளியேறினேன் என்றால், ஜெனிவாவில் கூட்டம் இருந்தது. போகும் முன் நிதியமைச்சரைச் சந்தித்தேன். வங்கிகளுக்கு கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதாக அவரிடமும் தெரிவித்தேன். இதுதான் உண்மை. அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை நான் ஏற்க மாட்டேன். கிங்பிஷர் விமானங்கள் தொடர்ந்து பறக்க வேண்டும் என்பதற்காக ரூ.4000 கோடி முதலீடு செய்தோம். ஆனால் குற்றச்சாட்டுகள் வேறு பாதையில் செல்கின்றன. அறங்கூற்றுமன்றம் முடிவு செய்யட்டும் என்றார்.

மல்லையா வழக்கறிஞர் வெஸ்ட்மின்ஸ்டர் அறங்கூற்றுவர்கள் முன்பு கூறும்போது, 'கிங்பிஷ்ருக்கு ஏற்பட்ட நட்டங்களை ஐடிபிஐ அதிகாரிகள் நன்கு அறிவார்கள். ஐடிபிஐ அதிகாரிகளின் மின்னஞ்சல்களை வைத்துப் பார்க்கும் போது நட்டங்களை மல்லியா மறைத்தார் என்ற அரசுதரப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. மேலும் ஏமாற்றுவதற்காக மல்லையா வங்கிக் கடன் கோரியதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மல்லையாவிடம் வங்கிகளுக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்துவது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, நிச்சயமாக அதற்காகத்தான் கடன் திருப்புதலுக்கான சலுகை கேட்டேன் என்றும் தெரிவித்தார் என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,908.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.