Show all

வங்கிகளின் ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளில் இருந்து ஏராளமான பணம் மாயம்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் நிதி அமைச்சகம் இரண்டு பொதுத் துறை வங்கிகளில் இருந்து 5 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் வங்கி கணக்கை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தங்களது வங்கி கணக்கில் லட்சக் கணக்கில் திருடு போனதாகப் புகார் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஆந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களிடம் இருந்து 4,20,098 ரூபாய் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலே எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா வங்கியைப் போன்றே ஆதார் இணைக்கப்பட்ட சிண்டிகேட் வங்கி கணக்கில் இருந்து 1,21,500 ரூபாய் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை ஆதார் எண் இணைக்கப்பட்ட பிறகு 7.65 லட்சம் மதிப்பிலான பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக 20 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் இருந்து 5.89 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டதாக 15 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான மாநில இந்திய வங்கியில் இருந்தும் 80,500 ரூபாய் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்ட யூகோ வங்கி கணக்குகளில் இருந்து 95,250 ரூபாய் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தனிநபர் அடையாள ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களிடம் இருந்து எந்தத் தரவும் திருடப்படவில்லை என்றும் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதற்கு வங்கிகளின் இணையதளச் சேவைகள் தான் பொறுப்பு என்றும் முடித்துக் கொண்டது.

500 ரூபாய்க்கு ஆதார் தகவல் வெளியிட்டதாக ஒரு குழு பிடிபட்டிருப்பதும், இன்னும் பல்வேறு குழுக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக ஒரு பக்கம் தீயாய் செய்தி பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,658

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.