Show all

கடைசி இடத்தில் ஒன்றிய அரசின் பணச்செயலி!

ஒன்றிய அரசின் பணச்செயலியான ‘பணத்திற்கான இந்திய இடைமுகம் செயலி’ (BHIM) பணப்பரிமாற்றத்தில் கடைசி இடத்தில் உள்ளதான நிலையில், தனியார் நிறுவனச் செயலியான போன்பே முதலிடத்தில் உள்ளதாம். 

06,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் எண்ணிமக் கொடுப்பனவுச் சேவையைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் நடுவே கடுமையான போட்டி உருவாகியுள்ளது. 

இந்தியாவில் போன்பே, கூகுள் பே, பேடிஎம், ஆகிய நிறுவனங்கள் நடுவே கடுமையான போட்டி உருவாகியிருந்த நிலையில் அண்மையில் வாட்ஸ்அப் பே அறிமுகம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.   

இந்தியக் கொடுப்பனவுக் கழகம் வெளியிட்டுள்ள தகவல் படி இந்தியாவில் கடந்த மாதம் கூகுள் பே செயலியில் மக்கள் 854.49 மில்லியன் பரிமாற்றங்கள் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாயைப் பரிமாற்றம் செய்துள்ளனர். 

இதே கடந்த மாதத்தில் போன்பே செயலியில் சுமார் 902.03 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் மூலம் சுமார் 1.82 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணத்தைப் பரிமாற்றம் செய்ய நாட்டின் மிகப்பெரிய செயலியாக முன்னேறியுள்ளது போன்பே. 

மேலும் போன்பே மற்றும் கூகுள்பே ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே நாட்டின் மொத்த பணப் பரிமாற்ற வர்த்தகத்தில் 78 விழுக்காட்டைக் கைப்பற்றியுள்ளன. 

3வது இடத்தில் பேடிஎம் செயலி 256.36 மில்லியன் பணப்பரிமாற்றத்தின் மூலம் 31,291.83 கோடி ரூபாய் அளவிலான பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளது. 

இதேபோல் இந்தியாவில் புதிதாக அறிமுகமாகியுள்ள வாட்ஸ்அப் பே கடந்த மாதத்தில் சுமார் 8,10,000 பரிமாற்றங்கள் மூலம் 29.72 கோடி ரூபாய் அளவிலான பணப் பரிமாற்றத்தைச் செய்துள்ளது. 

5வது மற்றும் கடைசி இடத்தில் அமேசான் பே மற்றும் ஒன்றிய அரசின் பணச்செயலியான ‘பணத்திற்கான இந்திய இடைமுகம் செயலி’ உள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.