Show all

இளம் வீரர்கள் வரலாற்று வெற்றியை ஈட்டித் தந்துள்ளனர் ஆஸ்திரேலியாவில்! துடுப்பாட்ட சோதனைப் போட்டியில்

எதிர்கால இந்தியத் துடுப்பாட்ட அணி பாதுகாப்பான கைகளில் பத்திரமாக கைமாற்றப்பட்டு உள்ளது என்பதாக, இந்திய துடுப்பாட்ட கொண்டாடிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது இந்த ஆஸ்திரேலிய வெற்றி. 

06,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஆசியாவை சேர்ந்த வேறு எந்த நாடும், ஆஸ்திரேலிய மண்ணில் துடுப்பாட்ட விளையாட்டில் சோதனைத் தொடரை வென்றதில்லை. இன்று ஆஸ்திரேலிய மண்ணில் சோதனைத் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இது இளம் ஆட்டக்காரர்கள் நிகழ்த்திய சாதனை என்பதால், நமக்குள் நிறைய வினாக்கள் எழுவதற்கான காரணமாகி நிற்கிறது இந்தச் சாதனை.

ஆஸ்திரேலியாவில் நடந்த துடுப்பாட்ட சோதனை விளையாட்டில் ஆஸ்திரேலியாவை 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. சோதனைப் போட்டிகளுக்கென்றே அளவெடுத்து செய்யப்பட்டவர் போன்ற ஸ்டீபன் ஸ்மித், அதிரடி வீரர் டேவிட் வார்னர், துடுப்பாட்ட உலகின் முன்னணி பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன், அடுத்த மெக்ராத் என்று வர்ணிக்கப்படும் ஹசில்வுட் ஆகியோருக்கு எதிராக களமிறங்கி ஆடிய இளம் இந்திய அணி வெற்றி வாகை சூடி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

விளையாட்டில் இருந்த விராட் கோலி தாயகம் திரும்பி விட்ட நிலையிலும், இந்திய அணி சிறப்பான வெற்றியை சாதித்திருக்கிறது. 

சிட்னியில் 3வது சோதனைப் போட்டியை, தமிழக வீரர் நடராஜன், ரிஷப் பந்த், அஸ்வின், ஹனுமான் விகாரியின் மன உறுதியால், வெற்றி தோல்வி இல்லா நிலையை முன்னெடுத்தது இந்திய அணி. 

பிரிஸ்பன் திடலில் நடந்த நான்காவது போட்டியில், பிரிஸ்பன் திடலில் நாங்கள் தோற்றதே இல்லை என்ற இறுமாப்புடன் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அதிர்ச்சி தோல்வியை பரிசாக கொடுத்துள்ளது இந்தியா.

விராட்கோலி கிடையாது. முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக வெளியேறிவிட்டனர். சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் கிடையாது. இத்தனை, இல்லை, இல்லைகளுக்கு நடுவில் பாதி பலம் கொண்ட இந்திய அணி என்று வர்ணிக்கப்பட்ட ஒரு அணியிடம் ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களுக்கு திறமை இருக்கிறது, வாய்ப்பு மட்டும் கிடைத்தால் போதும், நாங்கள் யார் என்பதை காட்டி விடுவோம் என்பதை தமிழக வீரர் நடராஜன், வாசிங்டன் சுந்தர், ரிசப் பந்த் நிரூபித்துள்ளனர். மூத்த ஆட்டக்காரர்களான புஜாரா, ரகானே, ரோகித் சர்மா போன்றவர்களை விடவும் இந்தத் தொடரில் போட்டியை மொத்தமாக மாற்றக்கூடிய முதன்மைத் தருணங்களில் அணிக்கு தோள்கொடுத்து நின்றது இவர்கள்தான். எதிர்கால இந்திய அணி பாதுகாப்பான கைகளில் பத்திரமாக கைமாற்றப்பட்டு உள்ளது என்பது இந்திய துடுப்பாட்ட கொண்டாடிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது இந்த ஆஸ்திரேலிய வெற்றி. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.