Show all

கர்நாடகத்துக்கு 28-ஆவது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடகத்துக்கு 28-ஆவது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லையில் சுமார் 3 கி.மீ.தூரத்திற்கு தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்கக் கூடாது என்று கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றதால் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தமிழக அரசுப் பேருந்துகள் பெங்களூருக்கு இயக்கப்படவில்லை. ஒசூருடன் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழக -கர்நாடக மாநில பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொலை வழக்கு விசாரணைக்காக தமிழக எல்லைக்குள் சாதாரண உடையில் காவல் துறையினர் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் வந்த கர்நாடகா மாநில காவல்துறையினரை, தமிழக காவல்துறையினர் அனுமதிக்காததால் அவர்கள் ஆத்திரமடைந்து, ஞாயிற்றுக்கிழமை கர்நாடக எல்லையில் 20-க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைத்;ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. அந்த சம்பவத்துக்கு காரணமாகக் கூறப்படும் அத்திப்பள்ளி உதவி ஆய்வாளர் சீனிவாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநில எல்லையில் மீண்டும் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். துணை ராணுவத்தினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கர்நாடகம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒசூர் முதல் மூக்கண்டப்பள்ளி வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் ஆகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.