Show all

நகைக்கடை உரிமையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு

நகை கடையடைப்பு போராட்டம் 7-ந்தேதி(நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவையில் ரூ.100 கோடிக்கு நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

     தங்க நகைகளுக்கு ஒரு விழுக்காடு கலால் வரி விதிக்கப்படும் என்று நடுவண்அரசு வரவு-செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகை தொழில் சார்ந்த தொழில்கூட உரிமையாளர்கள், கைவினை கலைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2-ந்தேதி முதல் இந்தியா முழுவதும் தங்க நகை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவையில் 650 கடைகளும், 15 ஆயிரம் நகை பட்டறைகள் மூடப்பட்டும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

     இந்தப் போராட்டம் குறித்து தங்கநகை வியபாரிகள் சம்மேளன மாநில தலைவர் ரகுநாத், செயலாளர் வெங்கடேஷ், நகை உற்பத்தியாளர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் முத்து வெங்கட்ராம் ஆகியோர் கூறியதாவது:

 

     கோவையில் கடந்த 4 நாட்களில் நகைக்கடைகள் மற்றும் நகை பட்டறைகள் மூடப்பட்டுள்ளதால் ரூ.100 கோடி அளவுக்கு நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு நகை வர்த்தகம் முடங்கி உள்ளது.

 

நடுவண் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து வருகிற 7-ந்தேதி(நாளை)வரை நகைக்கடை அடைப்பு போராட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கோவையில் நாளை(திங்கட்கிழமை) நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், கலால் வரியை ரத்து செய்யக்கோரி மனிதசங்கிலி போராட்டத்தை நடத்துகிறார்கள். பெரியகடைவீதி, ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, குறுக்குவெட்டுச்சாலை  ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மனித சங்கிலி போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும்

இவ்வாறு நகைக்கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.